காபி அல்லது டீ குடிப்பதைக் குறைத்துக் கொண்டபோது, இரவில் திடீரென வழக்கத்திற்கு மாறான அளவில் தெளிவான, மிக விரிவான, சில நேரங்களில் திகிலூட்டும் கனவுகள் தோன்றுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
காஃபின் உட்கொள்ளும் அளவைக் குறைத்த சில நாள்களிலேயே, தங்களின் கனவுகள் முன்பைவிட அதிகத் தீவிரத்துடனும் நினைவில் ஆழமாகப் பதியும் வகையிலும் இருப்பதாகப் பலர் அனுபவத்தின் அடிப்படையில் கூறியுள்ளனர். இது முதலில் கேட்பதற்கு விசித்திரமாகத் தோன்றினாலும் இதன் பின்னணியில் அறிவியல் ரீதியான விளக்கம் உள்ளது.
காஃபின் என்பது நரம்பு மண்டலத்தைத் தூண்டும் பண்புகளைக் கொண்ட ஓர் இயற்கை வேதிப்பொருள். நாம் விழித்திருக்கும் நேரங்களில் மூளையில் படிப்படியாகச் சேரும் ‘அடினோசின்’ எனும் வேதிப்பொருளின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம், காஃபின் நம்மைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. பொதுவாக, நாளின் இறுதியில் நமக்குத் தூக்க உணர்வை உருவாக்குவது இந்த அடினோசின் வேதிப்பொருள்தான். நாம் தூங்கும்போது அது உடலிலிருந்து அகற்றப்படுகிறது.
ஆனால் காஃபின் இந்தச் சமிக்ஞையைத் தடுத்து நிறுத்துவதால், அடினோசின் உடலில் இருந்தாலும் நாம் சோர்வை உணர்வதில்லை. காஃபினின் தாக்கம் குறையத் தொடங்கியவுடன், தூக்க உணர்வு திடீரெனத் திரும்புகிறது. இதைத்தான் பலர் ‘கிராஷ்’ அல்லது ‘திடீர்ச் சோர்வு’ என விவரிக்கின்றனர்.
நம்மில் பலர் நினைப்பதைவிட காஃபினின் தாக்கம் உடலில் நீண்ட நேரம் நீடிக்கக்கூடியது. அதன் அரை-ஆயுள் காலம் தோராயமாக மூன்று முதல் ஆறு மணி நேரம்வரை இருப்பதால், மாலையில் உட்கொள்ளும் காஃபின் இரவுநேரத் தூக்கத்தையும் அதன் தரத்தையும் பாதிக்கக்கூடும்.
தாமதமாகவோ அதிக அளவிலோ காஃபின் உட்கொள்வது தூக்கத்தைச் சீர்குலைக்கும் என்பதை ஆய்வுகள் தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, இது ஆழ்ந்த உறக்க நிலையான என்ஆர்ஈஎம் (deep NREM sleep) தூக்கத்தைப் பாதிப்பதோடு, இரவில் அடிக்கடி விழிப்பு ஏற்படுவதையும் அதிகரிக்கிறது.
காஃபின் அளவைக் குறைப்பதற்கும் தெளிவான கனவுகள் தோன்றுவதற்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளது என உறுதியாகக் கூறும் ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், தூக்கத்தின் தரத்துக்கும் கனவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது அறியப்பட்ட உண்மை.
காஃபின் உட்கொள்ளல் குறையும்போது, தூக்கம் பொதுவாக நீடித்ததாகவும் இடையூறுகள் குறைந்ததாகவும் அமைகிறது. இது ஒருவித ‘மீள் விளைவு’ (rebound effect) ஏற்பட வழிவகுக்கிறது. அதாவது, உடல் ஆர்ஈஎம் (REM) தூக்க நிலையில் அதிக நேரம் செலவிடத் தொடங்குகிறது. இந்தக் கட்டத்தில்தான் கனவுகள் அதிகமாக உருவாகின்றன.
தொடர்புடைய செய்திகள்
தெளிவான கனவுகள் மிக உண்மையான அனுபவத்தைத் தரக்கூடியவை. வலுவான உணர்வுகளும் தெளிவான காட்சிகளும் கொண்ட இக்கனவுகள், எளிதில் நினைவில் நிலைத்திருக்கும். ஆர்ஈஎம் தூக்கத்தின்போது உடல் தளர்ந்த நிலையில் இருந்தாலும், மூளை மிகச் சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதுவே இத்தகைய கனவுகள் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலையாக அமைகிறது. மேலும், ஆர்ஈஎம் தூக்க நேரத்தில் விழித்துக்கொண்டால், அந்தக் கனவுகள் தெளிவாக நினைவில் பதியும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
காஃபினைக் குறைக்கும் அனைவருக்கும் இந்த அனுபவம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. அப்படியே ஏற்பட்டாலும், அது தற்காலிகமானதாகவே இருக்கலாம். கனவுகள் என்பவை மன அழுத்தம், அன்றாட நடைமுறைகள், ஒட்டுமொத்த உடல்நலம் போன்ற பல காரணிகளால் பாதிக்கப்படும் செயல்முறைகளாகும்.
காஃபினைச் சார்ந்திருப்பவர்களும், அதை உட்கொண்டாலும் நல்ல தூக்கத்தை விரும்புபவர்களும், காஃபின் உட்கொள்ளும் நேரம், அளவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். உறங்குவதற்குக் குறைந்தது எட்டு மணி நேரத்திற்கு முன்பே காஃபின் உட்கொள்வதைத் தவிர்ப்பதும் அதன் அளவைக் குறைப்பதும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.
நல்ல தூக்கம் தொடரும்போது, அதனுடன் எதிர்பாராத வகையில் தெளிவான, மறக்கமுடியாத கனவுகளும் தோன்றக்கூடும்.

