சிங்கப்பூரின் வெப்பமண்டலப் பருவநிலையில் வாழும் நீரிழிவு நோயாளிகள் சில தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறார்கள்.
கடும் வெப்பமும் அதிக ஈரப்பதமும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உடலில் நீரின் அளவு, ஒட்டுமொத்த உடல்நலம் ஆகியவற்றைக் குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
நீரிழிவு நோயின் வகை 1, வகை 2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெப்பத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இது, நீரிழிவு தொடர்பான சோர்வு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்படும் உடனடி மாற்றங்கள் உள்ளிட்ட சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
ஈரப்பதம் ரத்தத்தில் சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறது?
அதிகமான வெப்பநிலையும் ஈரப்பதமும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன. இது இன்சுலின் உணர்திறனை மாற்றி உடலில் நீரிழிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
சிங்கப்பூரின் தட்பவெப்பநிலையில் வியர்வை அதிகம் வெளியேறுவதால் உடலில் திரவ இழப்பு அதிகரிக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். ஏனெனில், நீரிழிவு ஏற்படும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. மாறாக, வெப்பம் இன்சுலின் உறிஞ்சுதலை வேகப்படுத்துவதால் ரத்த சர்க்கரை அளவு திடீரெனக் குறையும் அபாயமும் உள்ளது.
நீரிழிவு ஏற்படும்போது அடர்த்தியான நிறத்தில் சிறுநீர், தலைசுற்றல், தீவிரமான தாகம் போன்ற அறிகுறிகள் தோன்றும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதால் வியர்வை, உடல் நடுக்கம், குழப்பம் போன்ற அறிகுறிகளும் தோன்றலாம். இவை வெப்பச் சோர்வின் அறிகுறிகளைப் போலவே தோன்றும். மேலும், வெப்ப அழுத்தம், சோர்வு இரண்டின் காரணமாக குளுக்கோஸ் கட்டுப்பாடு மேலும் மோசமடையும்.
சிங்கப்பூர் வெப்பத்தில் ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்தும் முறைகள்
தொடர்புடைய செய்திகள்
அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். சர்க்கரை அதிகம் உள்ள பானங்களைத் தவிர்க்க வேண்டும். இளநீர் போன்ற தாதுக்கள் நிறைந்த பானங்கள் உடலிலுள்ள கனிமங்களைச் சமநிலைப்படுத்த உதவுகின்றன.
உணவுப் பழக்கங்களில் சில மாற்றங்களை மேற்கொள்வது பயனளிக்கும். முழு தானியங்கள், அவரை வகைகள், பச்சைக் காய்கறிகள் போன்ற குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடுள்ள உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவை உடலுக்கு மெதுவாகவும் நிலையாகவும் ஆற்றலை வழங்கும். தர்ப்பூசணி, வெள்ளரி, கீரை வகைகள் போன்ற உணவுகள் உடலின் நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுகின்றன.
மேலும், ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்தபின் அல்லது வெப்பத்தில் நீண்ட நேரம் இருந்தபின் ரத்த சர்க்கரை அளவைச் சோதிப்பது நல்லது. முக்கியமாக, தலைசுற்றல் அல்லது அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாகச் சர்க்கரை அளவைச் சோதிக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகள், இன்சுலின் போன்றவற்றை முறையாக அடுக்கி வைக்க வேண்டும். இன்சுலினை சூரிய ஒளி நேரடியாகப் படும் இடங்களில் வைக்காமல் குளிர்ந்த இடத்தில் வைத்திருப்பது அவசியம். பயணம் செய்யும்போது மருந்துகளைப் பாதுகாப்பான பெட்டிகளில் வைத்துக் கொள்வது நல்லது.
வெப்ப அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். நீண்ட நேரம் வெளியில் இருக்க வேண்டியிருந்தால் அடிக்கடி நிழலில் அல்லது குளிரூட்டப்பட்ட இடங்களில் ஓய்வெடுக்கலாம். போதுமான உறக்கம் இல்லாவிட்டாலும் ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு பாதிக்கப்படும் என்பதால் தரமான உறக்கம் பெறுவது அவசியம்.
எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்
போதிய அளவு தண்ணீர் குடிப்பது, சரியான உணவு முறைகளைப் பின்பற்றுவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தவறாமல் கண்காணிப்பது ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
தொடர்ச்சியான சோர்வு, தலைசுற்றல் அல்லது ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம்.
சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சிங்கப்பூரின் கடும் வெப்பத்திலும் உடல்நலத்துடன் ஆற்றல் நிறைந்தவராக இருக்க முடியும்.