தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவுத் தேடலைக் கட்டுப்படுத்தும் வழிகள்

2 mins read
f98fab71-a374-406a-bbc3-9748d94281bc
உடல்வாகு உடல் எடைக்கு ஏற்ற சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவு உண்பது, உணவுத் தேடலைக் கட்டுப்படுத்தும். - படம்: பிக்சாபே

பெரும்பாலும் ‘கிரேவிங்க்ஸ்’ எனும் உணவின் மீது ஏற்படும் ஈர்ப்பு, உணவுக் கட்டுப்பாட்டுடன் உட்கொள்ளும் இலக்கை அடைய முடியாமல் தடுக்கிறது.

குறிப்பாக, எடை குறைவதற்குக் குறிப்பிட்ட உணவுமுறையைப் பின்பற்றும்போது இந்த உணவு ஈர்ப்பு அதிகரிப்பதைக் காணலாம்.

இவ்வகை ஈர்ப்பு, தனிநபரின் உணவுமுறைக்கும் பழக்கங்களுக்கும் ஏற்ப மாறுபடும். பொதுவாக, இனிப்பான உணவு உண்ண வேண்டும் எனும் தேடல் நிலவுவதைக் காணலாம். புதிதாக உணவுக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றத் தொடங்கும் பலர் எதிர்கொள்ளும் சிக்கல் இது.

இனிப்பான உணவு மனதை மகிழ்விப்பதாகவும் நம்பப்படுகிறது. அதனைச் சரிசெய்ய ‘சாக்லேட்’, குளிர்பானம் உள்ளிட்டவற்றை நாடுவது அதிக கலோரிகள் உட்கொள்வதற்கு வழிவகுக்கும்.

உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தத் தொடங்குவோர், 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை சிரமத்தை எதிர்நோக்கலாம்.

தொடர்ந்து, சரியான நேரத்தில் ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொண்டு, பசி இல்லாதவாறு பார்த்துக்கொள்வது உதவும்.

இருப்பினும், அவ்வப்போது இனிப்பு தொடர்பாக ஏற்படும் ஈர்ப்பைச் சரிசெய்ய, சில எளிய முறைகளைக் கையாண்டு பார்க்கலாம். அந்த உணர்வு ஏற்படும்போது இனிப்புச் சுவை உள்ள உலர்ந்த பழங்கள், பேரிச்சை உள்ளிட்டவற்றை உண்ணலாம், அல்லது பழங்களை உட்கொள்ளலாம்.

சாக்லேட், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றை உட்கொள்ள நேர்ந்தால் அவற்றை ஓர் ஊட்டச்சத்து உணவுடன் இணைத்து உண்பது அளவுக் கட்டுப்பாட்டில் உதவும்.

எடுத்துக்காட்டாக, ‘டார்க்’ சாக்லேட்டுடன் வாழைப்பழம், பாதாம், வால்நட் போன்ற உலர் விதைகளைச் சேர்த்து உட்கொள்ளலாம். இந்த ஈர்ப்பு உணர்வு அடிக்கடி ஏற்படுவதாக உணர்ந்தால் மனத்தைத் திசைதிருப்ப சற்றே நடக்கலாம்.

சிலருக்கு அதிக உப்பு சேர்த்த உணவின் மீது ஈர்ப்பு ஏற்படலாம். நறுமணப் பொருள்கள் நிறைந்த உணவை உட்கொள்வது உப்புச் சுவை குறைக்க உதவும். உப்பு நிறைந்த உணவை உட்கொள்ளும் எண்ணம் ஏற்பட்டால் எலுமிச்சை, ஆரஞ்சுப் பழச்சாறு போன்ற இயற்கை புளிப்புத் தன்மை கொண்ட உணவை உட்கொள்ளலாம்.

புரதம், நுண்சத்துகள் குறைபாடும் உணவுத் தேடலுக்கு வழிவகுக்கும். அதனைக் கவனித்துச் சரிசெய்வதும் அவசியம்.

பொதுவாக, எந்தவித உணவுத்தேடலும் ஏற்படும்போது குளிர்ந்த நீர் அருந்துவது அதனைக் கட்டுப்படுத்தும். அதிக கட்டுப்பாட்டை விரும்பினால், தேடல் ஏற்படும்போது பல் துலக்கலாம். சில மணி நேரம் வரை எதுவும் சாப்பிடத் தோன்றாமல் இருக்கும்.

புதிதாக உணவுக் கட்டுப்பாடு தொடங்கும்போது, ‘இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க்’ (intermittent fasting) போன்ற நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் முறையைப் பின்பற்றாமல் எளிதான உணவுமுறைகளில் தொடங்கலாம். உடல்வாகு, ஊட்டச்சத்து தேவை உள்ளிட்டவற்றைப் பொறுத்து, உரிய நிபுணர்களின் பரிந்துரைகளுடன் உணவுக் கட்டுப்பட்டை மேற்கொள்வதும் அவசியம்.

குறிப்புச் சொற்கள்