குறுநல்வாடை

குறுநல்வாடை

9 mins read
049a5935-68a0-4568-86e3-a665243d3c1f
தமிழ் ஐயப்பன் - படம்: தமிழ் ஐயப்பன்

முதல் முறையாகப் பார்க்கிற பொழுது வருகிற அதிர்ச்சிக்கெல்லாம் என்றுமே நம்பிக்கை இருந்தது இல்லை. அதைப் பொய்யாக்குவதுதானே அழகாகவும் இருக்கிறது. நடைபாதையில் நடக்கும்போது தலையைத் தொடுகிற மாதிரி விருட்டெனப் பறக்கும் புறாவுக்கு அதிர்ச்சியாகி, அடுத்த நொடி  ‘அழகா இருக்கே’ என நினைக்காமலா இருந்திருப்போம். அதைப் போலத்தான் பொதுநூலகத்தில் மாதந்தோறும் நடக்கும் தமிழ் நிகழ்வு கூடுகையில் பார்த்ததில் தலைக்கும், அடிப்பாதங்களுக்குமிடையில் சிறிய மின்னதிர்ச்சி.

திருமண வீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருந்தாலும் மேடையில் ஓரமாகப் பளபளவென நிற்கிற குத்துவிளக்கைக் கவனிக்கிறோமே அது மாதிரிதான் அவளையும் பார்த்தேன். முகத்தில் ஒரு துண்டு பிறைக்கீற்றாக முடிக்கற்றை பிரபஞ்சத்தை அசைத்துக்கொண்டிருந்தது. ஒரு நொடி நான் மட்டும் பிரபஞ்சத்தில் இருப்பதாகத் தோன்றியது. சிவன் கோயில் பிரகாரத்தில் உதிர்ந்து, சாய்ந்தவாறு விழுந்திருக்கும் செண்பகப்பூவின் நிறம் அவளுக்கு.

சிவன் கோவில் என்றதும் அங்கயற்கண்ணி ஞாபகம் தானாகவே  முளைக்கிறது. இந்த மாதிரியான இன்னொருவருக்கான காத்திருப்பில் இதைப்போலக் காத்திருக்க வைத்த காதலிகள் ஞாபகத்தில் நிறைகிறார்கள்.  அன்றைக்கு என்னுடைய வகுப்பறையே அவளைக் காதலித்தது. இல்லையெனில் அந்த உணர்வுக்குக் காதல் எனப் பெயர் வைத்திருந்தோம். அதற்குப் பிறகு பல  வருடங்கள் கழித்து ஊரில் போய் விசாரித்தால் ஊரே மாறி இருந்தது. அவளிருந்த வீட்டில் வேறு யாரோ குடியிருந்தார்கள். திருவண்ணாமலைக்குக் குடிபெயர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். நாங்கள் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து  நூற்பாலைக்கு வந்ததைப்போல. ’ரஜினி சவுண்ட் சர்விஸ்’, ‘பாஸ்ட் புட்’ கடையாக மாறியிருந்தது. ஊரை விட்டு வெளியே வந்துவிட்டால் ஊரும் நம்முடன் வெளியே வந்துவிடுகிறது.

அவளுடைய அப்பா கோவில் குருக்களாக இருந்தார். காலையில் ஈரவேட்டியுடன் எங்கள் வீட்டைக் கடந்து போவார். உடம்பெல்லாம் திருநீறு வரிக்கோடுகளாக ஈரமடித்து அடர்சாம்பல் நிறத்தில் தெரியும். கையில் அவருடைய குடும்ப பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பழங்கால அலுமினியப் பாத்திரத்தில் சிவனுக்குப் படைக்க வேண்டிய அன்றைய நைவேத்தியம் இருக்கும். வாசலில் பற்பொடியை வாயில் குதப்பிக்கொண்டு  பார்த்துக்கொண்டிருப்பேன். 

எங்கள் வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் தெருவின் முடிவில் அவளுடைய வீடு. சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது ஒன்றாக அவளுடன் கிளம்ப முடியாது. தெருவை விட்டுச் சாலைக்குத் திரும்பும் விலக்கில் காத்திருக்க வேண்டும். சாலையின் முடிவில் சிவன் கோவில். எதிர்ப்பக்கம் சாலையின் முடிவில் திருப்பத்தில் திரும்பினால் சிறிது தூரத்தில் பள்ளிக்கூடம். திருப்பத்தில் இருக்கும் கட்டிடத்தில் ‘ரஜினி சவுண்ட் சர்விஸ்’ என ஒரு பெரிய போர்டில் எழுதியிருக்கும். ரஜினி மாமா எப்போதாவது உட்கார்ந்திருப்பார். அவருடைய பெயர் ராஜேந்திரன். ஊருக்குள்ள ரஜினி. எனக்கு ரஜினி மாமா. அங்கயற்கண்ணியையும் எல்லாரும் அமுதாவென்றுதான் கூப்பிடுகிறார்கள்.

கடையின் வாசல் படியில் கால் ஊன்றியவாறே அங்கயற்கண்ணி சைக்கிளுக்குக் காத்திருப்பேன், ஒருவேளை முன்னாடி போய்விட்டாளோ. என்கிற பதற்றமும் வரும். தூரத்தில் நெற்றி நிறைய திருநீற்றுடன் வருவாள். மாமாவிடம் கண்ணைக் காட்டினால் போதும், “காதலின் தீபம் ஒன்று..” பாடலை ஒலிக்க விடுவார். அவள் முன்னால் செல்ல இரண்டடி இடைவெளியில் நான், அவளது தலையில் அமர்ந்திருக்கும் குண்டு மல்லியையோ, பன்னீர் ரோஜாவையோ பார்த்துக்கொண்டு செல்வேன்.

சிரிக்கையில் லேசாகப் பின்புறம் வளையும் போதும், மோவாயில் கை வைத்துக்கொள்ளும் போதும், இடது பக்கக் கன்னக்குழி அமிழும் போதும்,பால் கெண்டைக் கண்கள் விரிய ஆச்சரியப்படும் போதும், அதிஉற்சாகத்தில் போய் நிற்கும்போது சிறுகுதி நடனத்திலும், தலைகீழாய்த் தள்ளாடும் பிஞ்சுத் தாமரை ஜிமிக்கியிலும், இவளே அங்கயற்கண்ணியாக இருக்கலாம். ஆனால் இவளுக்கு வேறு பெயர். பெயர்கள்தான் வேறாக இருக்கிறது நினைவில் ஒரே மாதிரியான பிம்பங்களைத்தான் எழுப்புகிறார்கள்.

இந்த நூலக நிகழ்வுக்கு இருபது, முப்பது பேர்தான் வந்திருக்கிறார்கள். அதுவே பெரிய கூட்டமாகத் தெரிந்தது. ஏசி அறையில் மெல்லிய குளிர்காற்று மோதி அலைந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் தேநீர் நிரம்பிய பாத்திரத்தை மேசை மீது வைத்திருந்தார்கள். அதற்குப் பக்கத்தில் வந்தவர்கள் வெறும் வாயாக இருக்கக்கூடாது என்பதற்காக உப்புமாவோ, தயிர் சாதமோ இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

நான் கடைசி வரிசையில் முன்புறம் இருக்கிற வாயிற்கதவு தெரிகிற மாதிரி அமர்வேன். கடைசியாக அமர்ந்தால் எல்லோரையும் பார்க்கிற மாதிரி வசதியாக இருக்கும். தேவைப்பட்டால் ரகசியமாகப் பார்த்துக்கொள்ளலாம். இதயத்தில் ‘மெமரி கார்டு’ போடும் வசதி இருந்தால் எல்லா ஆண்களின் மனதுக்குள்ளும் ஆயிரம் படமாவது தேறும். எதிர்பாராமல் எடுக்கப்படும் பெண்களின் ஆகச்சிறந்த புகைப்படங்கள் அனைத்தும் ஆண்களின் இதயத்தில்தான் குவிந்து கிடக்கிறது.

நிகழ்வு தொடங்க ஐந்து நிமிடம் இருக்கும்போது எப்படியும் வந்துவிடுவாள். வரவில்லை என்றாலும் ஏதாவது எடுக்கிற மாதிரி வெளியே வாசலில் போய் நிற்கலாம். அவசரமாய் முகத்தில் அசையும் முடியைக் காதின் மேல் பொருத்திக்கொண்டே, தேன் நிறத்தில் மஞ்சள் இழை நெய்யப்பட்ட சேலையில் நேரே பார்த்து, சிறிய இதழால் பெரிய சிரிப்பொன்றை உதிர்க்கலாம். அவசரமான சிரிப்புடன் கடந்து போவதைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. இருந்தாலும் தேநீர் மேசைக்கு அருகில் இன்றைக்காவது பேச வேண்டும் என்கிற திட்டம் வீணாகப் போகும். இப்படி ஒரு தடவை தாமதமாக வந்து தேநீர் நிரப்புகிற வாக்கில் என்னைப் பார்த்ததுதான், எனக்குள் இருந்த இதயத்திற்கும் மூளைக்கும் வன்முறையைத் தொடங்கி வைத்தது.

அழகை நிச்சயம் சொல்ல வேண்டும்தான். இருந்தாலும் ஓர் ஆணுக்குப், பெண் என்பதே போதுமானதாக இருக்கிறது. பெண்ணுக்குப் பிடித்துப் போய்விட்டால் அல்லது ஒரு பார்வையை உதிர்த்தால், அவளிடம் இருப்பதையெல்லாம் வலுக்கட்டாயமாக இழுத்து இழுத்து இதயத்திற்குள் போட்டு மூளையை மழுங்கடிப்பது. சிறிது காலத்தில் மூளை விழித்து விரிசல் வேர் விடும்போது என்ன செய்வது எனத் தெரியாமல் முழிப்பது. இவ்வளவும் தெரிந்தாலும் “சொல்லாமதான் தத்தளிக்கிறேன், தாளாம தான் தள்ளி நிக்கிறேன்” என்கிற பாடல்வரிதான் எல்லா நேரங்களிலும் உள்ளுக்குள் ஒலிக்கிறது.

ஆனால் இவள் அப்படியில்லை. எந்த உறுத்தலும் இல்லாமல் ஒளியைப்போல ஊடுருவிக்கொள்வாள். எப்போதும் அடர்த்தியான நிறத்தில், எளிமையான சேலை. வானத்தை உற்றுப் பார்க்கும்போது முளைக்கிற வெள்ளியைப்போல மிகச்சிறிய பொட்டு. சில நேரங்களில் சிவப்பு நிலவு மாதிரி சிறியதும் பெரியதுமாக இரண்டு பொட்டுகள். கண்ணாடி வளையல் மென்மயிராடும் கைகளுக்குள் தவழும்போது என் இதயம் சிணுங்கியிருக்கிறது. காதோரம் தெரியும் நரைகூடப் பக்கவாட்டிலிருந்து  பார்க்கும் பொழுது அழகாக இருக்கிறது. ‘முதல் மரியாதை’ படத்தில், ராதா ஒற்றை நரை முடியைக் கேட்பதுபோல் கேட்டால் தருவாளோ என்னவோ...

ஒருவேளை பேசினால், என்ன பேசுவது? பலமுறை யோசித்திருக்கிறேன். புத்தகத்தைப் பற்றிப் பேசலாம். சென்ற முறை புரட்சிகர எழுத்தாளர் புத்தகத்தைத்தான் நூலகத்தில் இரவலாகப் பெற்று கையில் வைத்திருந்தாள். கேரள எழுத்தாளரா இருக்குமென நினைக்கிறேன். அந்த வகை எழுத்துகள் பிடிக்குமென்றால் கண்டிப்பாக எங்காவது மூலையில் நின்று அடிக்கடி பின்புறம் திரும்பிப் பார்க்கிற எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். அவரைப்பற்றிப் பேசலாம். அவருடைய எழுத்தில் எதைப்பற்றிப் பேசுவது?

இல்லையெனில், இருக்கிற ஒரே ஆயுதம் நான்தானென நினைக்கிற எழுத்தாளர் யாராவது இருப்பார்கள், அதுவும் வேண்டாம். ‘பேஸ்புக்’ போகலாம். அங்கு சம்பந்தமே இல்லாமல் ஐம்பது பக்க நூலிற்கு எழுபது பக்கம் அறிமுகம் எழுதி, எழுதியவருக்கே தெரியாத விஷயங்களைப் பற்றிச் சொல்லியிருப்பார்கள். அதைப்பற்றிப் பேசலாம்.

எப்படிப் பார்த்தாலும் எளிதில் புரியாத விசயங்களை பற்றித்தான் பேச வேண்டும். அப்போதுதான் நம்மை அறிவாளியாக, இலக்கியவாதியாக நினைப்பார்கள். யார் புரியாமல் பேசினால் புத்திசாலியாகிற பிம்பத்தைக்கொண்டு வந்தார்களெனத் தெரியவில்லை. ஏதாவது சாமியாராகத்தான் இருக்கும். எப்பொழுதும் புகையைப் போட்டுக்கொண்டு “ஆன்மா என்னும் உள்ளொளி பிரயாணம், மரணத்தின் பிடியில் மனத்தின் வால்” எனப் பேசும்போது எதிரில் இருந்து கேட்டால் ஒரு மயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

எதுவுமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நானே சால்சாப்புக் கதை மாதத்திற்கு ஒன்று எழுதுகிறேன். மொத்தக் கதையையும் ‘பிடிஎஃப்’ போட்டு அனுப்பி வைப்பேன். எப்படியும் ஒரு கதைக்கு மேல் வாசிக்கமாட்டாள். அப்படியே வாசித்தாலும் லத்தீன் - ஆப்பிரிக்காவில் இந்த மாதிரி கதைகள் மிகப்பிரபலம் எனச் சொல்லலாம்.

சிறுகதையென்றால் எப்படிப் பார்க்க வேண்டுமென மூளை உருகி காதில் வழியும் மேதாவியாய் விளக்கம் கொடுக்கலாம். அப்படியும் அவள் நான் ஒரு சிறந்த எழுத்தாளரென ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ஐயாயிரம் கொடுத்து மண்டபத்தில்  ‘ஆசியாவின் அரிஸ்டாட்டில்’ எனப் பட்டத்தை வாங்கிவிடுவேன். பின்னாளில் ஒரு குறும் படத்தை எடுத்து இதே தேசிய நூலகத்தில் போட்டுக்காட்டி எல்லோரையும் அலற விடுவேன். அதற்குப் பின்பு எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், பன்முக மனிதர் என நம்புவாள்.

நிகழ்ச்சி ஆரம்பித்துவிடும்போல் இருக்கிறது. ஒலி அமைப்புகளைச் சரி பார்க்கிறார்கள். வரவேற்புரை வழங்குபவர் எழுந்து அங்குமிங்கும் நடக்கிறார். அறைக்குள் குளிரின் அடர்த்தியும் அதிகமாகியது.

இன்னும் ஆளைக்காணவில்லை. ஒருவேளை வராமல் போய்விடுவாளோ.? வரவில்லையெனில் முழுதாக ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். சென்ற மாதம் நான்தான் வரவில்லை. முடி வெட்டியவர் என்னுடைய ஏற்நெற்றி தெரிவதைப்போல அமோகமாக முடித்துவிட்டார். அதை  ‘முன்வழுக்கை’ என மற்றவர்கள் சொல்வார்கள். அதனால் போன மாதம் வரவில்லை. வேறெந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாது. வானத்திலிருந்து வருகிற தேவதையைப்போல மாயமாய் மறைந்து விடுவாள். 

இனி அந்த ஒரு மாதமும் அவளை நினைத்து கவிதை எழுதலாமென நினைக்கிறேன். தலையணை அளவுக்கு ஒரு புத்தகத்தைப் போட வேண்டும். வெளியீட்டு விழா அழைப்பிதழைக் கொண்டு போய் தேவதையின் வீடு தரையில்தான் இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு வரலாம்.

வீட்டுக்குப் போய் உட்கார்ந்ததும் வண்ணதாசன் கதையில் வருவதுபோல அவளுடைய வீடு முழுவதும் அவளுடைய முகம் நிறைந்திருக்கும். மாதுளையை அவளே உடைத்து, சாறெடுத்து கண்ணாடி தம்ளரில் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதைவிட அந்த நேரத்து மருதாணியாய் மாதுளை விதைகளின் சிவப்பு படிந்திருக்கும் விரல்கள் அழகாக இருக்கும். பழச்சாற்றை நீட்டும்போது முகத்தில் அசையும் முடிக்கற்றை வீழ்ந்து கிடக்கப் பின்னணியில் அடுத்த வீட்டுச் சுரங்கப்பாதையின் இருட்டு போலிருக்கும் தொலைக்காட்சி மனது வைத்து ராஜாவின் குரலில், “மீராவின் கண்ணன் மீராவிடமே” என ஒளி பரப்பினால் இன்னொரு தலையணை புத்தகத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

என்னுடைய புத்தகம்கூட வேண்டாம் வேறு ஏதாவது புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்தால்தான் என்ன, எப்படியும் மாதத்திற்கு ஒன்று எனப் புத்தகங்களை வெளியிடுகிறார்கள். நூலகத்தின் பதினாறாவது மாடியில் கண்ணாடிக் குடுவையைப்போல இருக்கும் அறையின், வெளியே செவ்வானம் படர்ந்திருக்க இவள் நடக்கும்போது “வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே, அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே” என்கிற பாடல் வரிகள் ஒலித்தால், மூன்றாவது  கவிதைப் புத்தகம் போட்டு முன்பதிவிலேயே கல்லா கட்டிவிடுவேன். 

பக்கத்திற்கு ஒரு ரூபாய் கணக்கில் அச்சடித்து முப்பது வெள்ளியென விற்றால், நிகழ்விற்கு வந்தால் புத்தகம் வாங்கவேண்டுமோ, என்கிற பயம் வருகிறதோ என்னவோ. புத்தகம் முக்கியமே இல்லை பொடி இட்லியும், பொங்கலும் முக்கியமென ஏதாவது ஒரு தருணத்தில் புரியவைக்க வேண்டும். தருணம் வாய்க்காமலா போய்விடும். மழையில் நனைந்தவாறே தலையில் கை வைத்து, ஓடுவதற்கு எப்படியும் ஒரு தருணம் வாய்க்கத்தானே செய்கிறது. 

கதவுக்கு அருகில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட நிற்பதுகூட ஒரு தருணம்தான். பதிவேட்டில் மூன்று இலக்க அடையாள எண்ணை எழுதும்போது வேறொன்று நினைவுக்கு வந்திருக்கிறது. சென்சாங் போன்ற பேரங்காடியில் பொருள்கள் வாங்கினால் தரும் ஐந்து மில்லியன் குலுக்கல் சீட்டும் பில்லுடன் இணைந்து வரும். அதில் இதைப்போல நிரப்பி வெளியில் மரப்பெட்டியில் திறந்திருக்கும் வாயில் தள்ளிவிட்டு வருவேன். 

ஒருவேளை குலுக்கலில் பரிசு கிடைத்தால் என்ன செய்யலாமென இவளுக்கும் சேர்த்தே யோசித்திருக்கிறேன். பிடித்த வண்ணத்தில் கார் வாங்கி, முன்புறம் எனக்குப் பக்கத்தில் இருக்கும் இருக்கையை அவள் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும். வந்து அமர்ந்ததும், வளைவில் ஏற்றி திரும்புகையில்  “அடி ஆத்தாடி… இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா...” ஒலிக்க விடவேண்டும். அதில் “தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்… உண்மை சொல்லு பெண்ணே, என்னை என்ன செய்ய உத்தேசம்” என்கிற வரி வரும்போது அவளைப் பார்த்துச் சிரிக்கவேண்டும்.

இதைப்போல் நிறைய தடவை நினைத்திருக்கிறேன். பத்து வெள்ளிக்கு ’டோட்டோ’ எடுத்துத் திரும்பும்போது, பஞ்சர் ஆன சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தபோது, வெள்ளை வெள்ளையாகச் சாலையில் ஓடும் முயலாக டெஸ்லா கார்களைப் பார்க்கும்போது, ராஜாவின் பாடல்களில் திளைக்கும் போதும்கூட. நினைவுகளுக்கு இது நடக்குமா, நடக்காதா என்பதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை. நினைவில் எல்லாமே நடந்துகொண்டேதான் இருக்கிறது. அங்கேதான் எல்லாமே பேரெழிலாக இருக்கிறது.

இப்போதும் நான் உட்கார்ந்திருக்கும் நேரத்திலும் ராஜாவின் பாடல்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பாடல் எப்போதும் முன்னோக்கித்தான் செல்கிறது. அதில் பயணிக்கும் நாம்தான் முன்னும் பின்னும் செல்கிறோம். இதுதான் கடைசிப் பாடலாக இருக்கும். இனிமேலும் தாமதமாக்கமாட்டார்கள்.

புத்தகம் அறிமுகம் செய்பவர், அதை எழுதியவர் எல்லாரும் வந்து விட்டார்கள். இப்போது தொடங்கினால் இன்னும் நிகழ்ச்சி முடிய இரண்டு மணி நேரம் ஆகும். கதையரங்கம் பற்றி ரஷ்யா வம்சாவளியென எண்ணிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் விமர்சனம் செய்வார். பின்பு அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி தலைவர் பேசுவார். இவரைத்தான் தலைவரென நினைத்துக்கொண்டிருந்தேன். பின் நாளில்தான் தெரிந்தது, இவருடைய பெயர் வேறு என்று.

ஒவ்வோர் அங்கமாக முடிந்துகொண்டு வந்தது. இப்போதாவது வந்தால் தேவலைதான். இங்கு நடக்கிற எல்லாவற்றையும் மறந்து விடுவேன். குமரி முனையில் சூரியனைப் பார்க்க இரவெல்லாம் காத்துக் கிடப்பதைப்போல இருந்தது.

நிகழ்வு முடியும் தறுவாயில் கதவைத் தள்ளிக்கொண்டு கை மட்டும் உள்ளே நீண்டது. அவளேதான். நான் வழக்கம்போல் அதிக சிரத்தையோடு நிகழ்வைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

குறிப்புச் சொற்கள்