சிங்கப்பூரின் மேம்பட்ட உற்பத்தித் துறையை மேலும் வலுப்படுத்த புதுப் பொருள் கண்டுபிடிப்புக்கான ‘மார்வெல்-ஏஐ’ எனும் ஆய்வு, தொழில்முனைப்பு முடுக்குத் தளத்தில் (Materials Accelerator for Research, Venture and Enterprise Launchpad) அரசாங்கம் $150 மில்லியன் முதலீடு செய்கிறது.
புத்தாக்கம், தொழில்நுட்ப வார மாநாட்டைச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) தொடங்கிவைத்து உரையாற்றிய துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில் அமைச்சருமான (வர்த்தகம்) கான் கிம் யோங் இப்புதிய திட்டத்தை அறிவித்தார்.
அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு (ஏஸ்டார்) வழிநடத்தும் ‘மார்வெல்-ஏஐ’ தளத்துக்கு, எரிசக்தி, வர்த்தக, தொழில் அமைச்சு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர், பொருளியல் வளர்ச்சிக் கழகம், தேசிய ஆய்வு அறநிறுவனம் ஆகியவை ஆதரவளிக்கின்றன.
இது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தானியக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பகுதிமின்கடத்தி, மேம்பட்ட உற்பத்தி, எரிசக்தி, ரசாயனம் உள்ளிட்ட துறைகளுக்கான புதிய உலோகம், செராமிக் போன்ற பொருள்களைக் கண்டறியும். ஃபாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட், எஸ்டி என்ஜினியரிங்’ உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் கைகோத்துள்ளன.
மனிதர்கள் செய்யக்கூடியதைவிட 25 மடங்கு அதிகமாக, 24 மணி நேரத்தில் 75 பாலிமர் மாதிரிகளையும் ஒரே நாளில் 470 உலோகக் கலவைகளையும் இதன்மூலம் பரிசோதிக்க முடியும்.
இதன்மூலம் புதிய பொருள் அறிவியல், ஏஐ, தானியக்கத் துறைகளில் சிங்கப்பூரர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
“செயற்கை நுண்ணறிவின் திறன்களை நம் தொழில் துறைகளுக்கான புதிய வாய்ப்புகளாகவும், வலுவான வணிகங்களாகவும், நம் மக்களுக்குச் சிறந்த வேலைகளாகவும் மாற்ற வேண்டும்,“ என்றார் அவர்.
நிறுவனங்களில் ஏஐ பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஏஐ சாம்பியன்ஸ்
நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஊக்குவிக்க ‘ஏஐ சாம்பியன்ஸ்’ என்ற புதிய திட்டத்தையும் துணைப் பிரதமர் அறிவித்தார்.
ஓசிபிசி, யுஓபி, சிங்டெல், சீட்ரியம், செம்ப்கார்ப், கெப்பல், கேப்பிட்டலேன்ட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எஸ்டி என்ஜினியரிங் ஆகிய 24 முன்னணி நிறுவனங்கள் இதில் முதற்கட்டமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, ஏஐ திட்டங்கள் மூலம் 2030க்குள் $900 மில்லியன் பொருளியல் மதிப்பைப் பெற யுஓபி இலக்கு வைத்துள்ளது.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, 280க்கும் மேற்பட்ட சிறிய தொழில்களுக்கு ஏஐ கருவிகளைப் பயன்படுத்த வழிகாட்டப்பட்டுள்ளது.
“செயற்கை நுண்ணறிவின் திறன்களை நம் தொழில்துறைகளுக்கான புதிய வாய்ப்புகளாகவும் வலுவான வணிகங்களாகவும் மக்களுக்குச் சிறந்த வேலைகளாகவும் மாற்ற வேண்டும்,” என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் வலியுறுத்தினார்.
