ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஜூலை 4ஆம் தேதி காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 18 பேர் காயமுற்று மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இரண்டு லாரிகளும் ஒரு கனரக லாரியும் அவ்விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன.
மரினோ கோஸ்டல் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் பெனாய் ரோடு வெளிச்சாலைக்கு முன்பு நிகழ்ந்த இவ்விபத்து குறித்து சிங்கப்பூர் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் காலை 6.35 மணிக்குத் தகவல் கிடைத்தது.
விபத்துக்குப் பின் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், விரைவுச்சாலையில் வலக்கோடி தடத்தில் ஒரு கனரக லாரியும் அதன் பின்னால் இரு லாரிகளும் ஒன்றன்பின்ஒன்றாக மோதிய நிலையில் இருப்பதையும் லாரிகளுக்கு முன்னால் சில சிதைவுகளும் காணப்பட்டன.
லாரியின் 43 வயது ஓட்டுநர், இரு லாரிகளில் இருந்த 19 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட 17 ஆண் பயணிகள் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
ஆடவர் 10 பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் இதர எட்டு ஆடவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

