தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட 3,300 பிடிஓ வீடுகள் விற்பனை

2 mins read
ce3b4c98-a820-47a5-abf3-a99c85277dee
பிடோக், செங்காங், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் அமையவிருக்கும் நான்கு திட்டங்களில் குறைவான காத்திருப்பு நேரம் கொண்ட பிடிஓ வீடுகள் இடம்பெறும். - படங்கள்: வீவக

மூன்றாண்டுகளுக்கும் குறைவான காத்திருப்பு நேரம் கொண்ட சுமார் 3,300 தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் அக்டோபர் மாத விற்பனை நடவடிக்கையில் வெளியிடப்படவுள்ளன.

பிடோக், செங்காங், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் அமையும் நான்கு பிடிஓ திட்டங்களில் இந்த வீடுகள் இடம்பெறும். இவை, அக்டோபரில் வெளியிடப்படவுள்ள 9,100 வீடுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை.

நீக்குப்போக்கான குத்தகையுடைய ஈரறை வீடுகள் (ஈரறை ஃபிளெக்சி வீடுகள்), மூன்றுத் தலைமுறையினருக்கான வீடுகள், மூத்தோருக்கான உதவி அம்சங்களைக் கொண்ட வீடுகள் ஆகியவை குறைவான காத்திருப்பு நேரம் கொண்ட இவ்வீடுகளில் அடங்கும் என்று வீவக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) தெரிவித்தது. விற்பனை நடவடிக்கை எந்தத் தேதியில் நடைபெறும் என்ற விவரத்தை வீவக வெளியிடவில்லை.

ஈசூனில் அமையவுள்ள இரண்டு புதிய பிடிஓ திட்டங்களில் மொத்தமாக 1,395 வீடுகளுக்குக் காத்திருப்பு நேரம் ஈராண்டுகள் ஏழு மாதங்கள். அவற்றில் ஒன்று, பா சூன் பா ரோட்டுக்கும் செஞ்சாரு லிங்க்குக்கும் அருகே அமையும், 826 வீடுகள் உள்ள செஞ்சாரு குரோவ் திட்டம்.

இத்திட்டத்தில் இடம்பெறும் ஆறு புளோக்குகளில் ஈரறை ஃபிளெக்சி வீடுகளும் ஐந்தறை வீடுகளும் இருக்கும்.

ஈசூனில் எழுப்பப்படும் மற்றொரு பிடிஓ திட்டம், ஈசூன் ஸ்திரீட் 31க்கும் ஈசூன் ரிங் ரோட்டுக்கும் இடையே அமையும் ஈசூன் கிளேட் (Yishun Glade). இத்திட்டத்தில் இடம்பெறும் நான்கு புளோக்குகளில் ஈரறை ஃபிளெக்சி வீடுகள், நான்கறை வீடுகள் இருக்கும்.

செங்காங்கில் கட்டப்படும் ஃபெர்ன்வேல் பிளெய்ன்ஸ் திட்டத்துக்குக் காத்திருப்பு நேரம் ஈராண்டுகள் எட்டு மாதங்களாகும். ஃபெர்ன்வேல் ஸ்திரீட்டுக்கும் ஃபெர்ன்வேல் லிங்க்குக்கும் இடையே அமையும் இத்திட்டத்தில் 830 ஈரறை ஃபிளெக்சி வீடுகளும் நான்கு, ஐந்தறை வீடுகளும் இருக்கும். அவற்றோடு, வாடகை வீடுகளுக்கான ஒரு புளோக்கும் திட்டத்தில் இடம்பெறும். மேலும், ஃபெர்ன்வேல் பிளெய்ன்சில் மூத்தோருக்கு உதவும் அம்சங்களைக் கொண்ட 207 சமூகப் பராமரிப்பு வீடுகளும் இடம்பெறும்.

ஃபெர்ன்வேல் பிளெய்ன்ஸ், லுப்பாங் இலகு ரயில் நிலையத்துக்கு அருகே அமைகிறது.

பிடோக்கில் கட்டப்படும் பிங் யி கோர்ட் பிடிஓ திட்டதுக்குக் காத்திருப்பு நேரம் ஈராண்டுகள் ஒன்பது மாதங்கள். இத்திட்டம் சை சீ ஸ்திரீட்டில் எழுப்பப்படுகிறது. இதில் இடம்பெறும் ஐந்து புளோக்குகளில் 862 ஈரறை ஃபிளெக்சி வீடுகள் முதல் மூன்று தலைமுறையினருக்கான வீடுகள் இருக்கும்.

இத்திட்டங்களுடன், 2025ஆம் ஆண்டில் இதுவரை குறைவான காத்திருப்பு நேரம் கொண்ட 4,690 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக வீவக தெரிவித்தது.

இவ்வாண்டு 4,500 அத்தகைய வீடுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த இலக்கைத் தாண்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்