பக்கு: பருவநிலை தொடர்பில் வளர்ந்த நாடுகள், 2035ஆம் ஆண்டுக்குள் வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 250 மில்லியன் டாலர் (336 பில்லியன் வெள்ளி) வழங்க முன்வந்துள்ளன.
டிரில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட பருவநிலை தொடர்பில் நிதியுதவி சார்ந்த இலக்கின்கீழ் அத்தொகை வழங்கப்படவுள்ளது.
அந்தத் தொகை போதுமானது அல்ல என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ சனிக்கிழமையன்று (நவம்பர் 23) கூறினார். ஏவோசிஸ் (Aosis) எனப்படும் சிறிய தீவு நாடுகள் கூட்டணி, சிட்ஸ் (Sids) என்றழைக்கப்படும் வளரும் சிறிய தீவு நாடுகள் அமைப்பு ஆகியவை, பணக்கார நாடுகளிடம் கூடுதல் தொகை வழங்குமாறு வேண்டுகோள் விடுப்பதைத் தாமும் ஆதரிப்பதாக திருவாட்டி ஃபூ சொன்னார்.
சிங்கப்பூர், அவ்விரு அமைப்புகளிலும் உறுப்பு நாடாக உள்ளது.
அஸர்பைஜான் தலைநகர் பக்குவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மன்றத்தின் காப்29 கூட்டம் நிறைவடைவதற்கு முன்பு தாம் தங்கியிருந்த ஹோட்டலில் நடந்த நேர்காணலின்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
காப்29 கூட்டம் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 22) நிறைவடையவிருந்தது. ஆனால், அதை கூடுதல் நாள்களுக்கு நீட்டிக்க நேரிட்டது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) வரை கூட்டத்தின் கடைசி அமர்வு உள்ளிட்ட அங்கங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் பருவநிலை தொடர்பில் நிதியுதவி சார்ந்த இலக்கை நிர்ணயிப்பது காப்29 கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை வளரும் நாடுகள் குறைவாகப் பங்காற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், சூறாவளி, அனல் காற்று ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் கரிமப் பயன்பாட்டைக் குறைக்கவும் வளரும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது இம்முயற்சியின் இலக்காகும்.
தொடர்புடைய செய்திகள்
பருவநிலை நிதியுதவி இலக்கின் தொடர்பில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பரிந்துரை வரையப்பட்டது. அதன்படி 2035ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு 336 பில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டன.