உயர் கல்விக் கழகங்களில் பெரியோர்க்கான கல்வித் திட்டங்களில் பயில அதிகமானோர் பதிவுசெய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியோரின் நேர அட்டவணைக்கு எளிதாகப் பொருந்தும் வகையில் குறுகியகாலப் பாடத்திட்டங்கள் அமைந்துள்ளதால், கல்வி வாய்ப்புகளை எளிதாக அணுக முடிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் இத்தகைய பாடத்திட்டங்களைப் பயிலப் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 40 விழுக்காடு உயர்ந்துள்ளதாக கல்வி; நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சனிக்கிழமை (ஜூலை 12) கூறினார்,
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘ஸ்கில்ஸ்பியூச்சர் ஃபெஸ்டிவல் X என்யுஎஸ் 2025’ நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜனில், 2024ஆம் ஆண்டில், கல்வி அமைச்சு, ஸ்கில்ஸ்பியூச்சர் ஆதரவுடன் சிங்கப்பூர் உயர் கல்விக் கழகங்களில் வழங்கப்பட்ட தொடர் கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களில் ஏறக்குறைய 188,000 பேர் பதிவுசெய்ததாகக் கூறினார்.
இது வேலைவாய்ப்புக்கு முந்தையப் பயிற்சிக்கான சேர்க்கை, அல்லது பணியைத் தொடங்குவதற்கு முன்பு பாடத்திட்டங்களில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையைவிட மும்மடங்கு அதிகம்.
இதுகுறித்து கருத்துரைத்த டாக்டர் ஜனில், ‘‘பயிற்சிகளுக்கான அதிக தேவைகள், திறன்களை மேம்படுத்திட விரிவாக்கப்பட்ட பாதைகள், அளிக்கப்பட்ட வாய்ப்புகள், ஆகியவை பெரியோர் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளன என்று விவரித்தார்.
இதற்கிடையே, புதிய துறைகளில் கால்பதிக்க விரும்புவோருக்கு வேலைவாய்ப்பு சார்ந்த வளமான வாய்ப்புகளை அளிக்கும் இலக்குடன், உயர் கல்விக் கழகங்கள் 54 புதிய திட்டங்களைத் தொடங்கவிருக்கின்றன என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.