இந்திய நட்சத்திர ஆமைகள், பாடும்பறவைகள், ஆசிய அரோவானா மீன்கள் உட்பட 2024ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட பல்வேறு உயிரினங்கள் சிங்கப்பூர் எல்லைகளில் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய 42 சம்பவங்கள் பதிவாயின.
அண்மைய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆக அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.
2022, 2023ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை முறையே 34, 35 ஆகப் பதிவானது. இந்த ஆண்டு (2025) ஜனவரி முதல் ஏப்ரல் வரை பதிவான இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 8 என்று கூறப்பட்டது.
கடந்த ஈராண்டுகளில் சிங்கப்பூரின் 30க்கு மேற்பட்ட இடங்களில் 240க்கு மேற்பட்ட விலங்குகள் கைப்பற்றப்பட்டதாக தேசியப் பூங்காக் கழகமும் குடி நுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் செவ்வாய்க்கிழமை (மே 27) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட விலங்குகளை டெலிகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் சிலர் விற்பனைக்கு அறிவித்ததாகக் கூறப்பட்டது.
சட்டவிரோதமான இத்தகைய விற்பனை உள்ளிட்ட விவரங்கள் செவ்வாய்க்கிழமை செந்தோசாவில் நடைபெற்ற ‘சைட்ஸ் குளோபல் யூத்’ மாநாட்டில் வெளியிடப்பட்டன.
முதன்முறையாக நடைபெறும் இந்த ஐந்து நாள் மாநாட்டில் ஏறத்தாழ 50 நாடுகளைச் சேர்ந்த 70க்கும் அதிகமான இளையர்கள் கலந்துகொள்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இளம் தலைவர்கள் அவரவர் நாடுகளில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைக் கையாள்வதற்குத் தேவையான திறன்களையும் தொடர்புகளையும் பெற உதவுகிறது இந்த மாநாடு.
புவியியல் ரீதியில் சிங்கப்பூர் அமைந்திருக்கும் இடம், இதன் வழியாகச் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் நடைபெறுவதற்கு ஏதுவாக விளங்குகிறது. எறும்புத்தின்னியின் (பெங்கோலின்) செதில்கள், காண்டாமிருகக் கொம்புகள் போன்ற விலங்குகளின் உடற்பாகங்களும் இவ்வாறு சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன.
சென்ற ஆண்டு கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்ததற்கு வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் செல்லப்பிராணிகளுக்கான தேவை அதிகரித்ததும் கடத்தல் முயற்சியைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்ததும் முக்கியக் காரணங்கள் என்று தேசியப் பூங்காக் கழகம் கூறியது.
சிங்கப்பூரில் இணையம் மூலம் விற்கப்படும் வெளிநாட்டு விலங்குகளில் ‘டெரன்டுலா’ எனப்படும் பெருஞ்சிலந்தி, முள்ளம்பன்றி, ‘சிறுத்தை’ மரப்பல்லி போன்றவை அடங்கும்.
சிங்கப்பூர் இளையர்கள் நிறுவியுள்ள ‘சைட்ஸ் குளோபல் யூத்’ அமைப்பின் மாநாட்டில் அறிவியலாளர்கள், வனச் சரகர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் பங்கேற்கின்றனர்.
‘சைட்ஸ் குளோபல் யூத்’ மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார்.

