மோசடிகளில் $6.4 மில்லியன் இழப்பு; 274 பேரிடம் விசாரணை

2 mins read
098accaa-5328-450a-9c51-067bf990fc23
இவ்வாண்டின் முற்பாதியில் மட்டும் ஏறத்தாழ 20,000 மோசடிச் சம்பவங்களில் கிட்டத்தட்ட அரை பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடிகளில் $6.4 மில்லியன் பறிபோனதாகக் கூறப்படும் நிலையில், மோசடியில் ஈடுபட்டதாக, மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 274 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதன் தொடர்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) வெளியிட்ட அறிக்கையில், 16 முதல் 80 வயதிற்குட்பட்ட 190 ஆண்களும் 84 பெண்களும் அடங்கிய அக்கும்பல் 600க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அரசாங்க அதிகாரி, நண்பர்போல் ஆள்மாறாட்டம், வேலைவாய்ப்பு, மின்வணிகம், முதலீடு, வாடகை போன்ற வழிகளில் மோசடிகள் அரங்கேறியதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதிமுதல் செப்டம்பர் 11ஆம் தேதிவரை காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைமூலம் இது தெரியவந்தது. ஏமாற்று, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், சட்டவிரோதக் கட்டணச் சேவை போன்றவற்றுக்காக அந்தச் சந்தேகப் பேர்வழிகள் விசாரிக்கப்படுகின்றனர்.

தங்களது வங்கிக் கணக்குகளை அல்லது கைப்பேசி இணைப்புகளைப் பயன்படுத்த மற்றவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாண்டின் முற்பாதியில் மட்டும் ஏறத்தாழ 20,000 மோசடிச் சம்பவங்களில் கிட்டத்தட்ட அரை பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஜனவரி - ஜூன் காலகட்டத்தில் மொத்தம் $456.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாகக் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட, மோசடிச் சம்பவங்கள் குறித்த அரையாண்டுப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் மோசடி மூலம் $522.4 மில்லியன் பறிபோனது.

இவ்வாண்டு முற்பாதியில் ஏறக்குறைய 1,000 பேர் 100,000 வெள்ளிக்குமேல் இழந்தனர். 2024 முற்பாதியில் கிட்டத்தட்ட 700 பேர் அவ்வளவு தொகையைப் பறிகொடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்