மத்திய கிழக்கில் பூசல் தொடர்வதையடுத்து எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவின் பாத்தாம் பகுதிக்கும் இடையிலான படகுச் (ferry) சேவையைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் ஆறு வெள்ளி உயர்த்தப்படுகிறது.
பாத்தாமுக்குப் படகுச் சேவை விடும் நிறுவனங்களான ஹொரைஸன் ஃபாஸ்ட் ஃபெரி, மஜெஸ்டிக் ஃபாஸ்ட் ஃபெரி, பாத்தாம் ஃபாஸ்ட் ஆகியவை இவ்வாறு வியாழக்கிழமை (மார்ச் 12) அறிவித்தன.
“சேவைகளைப் பாதுகாப்பான, நம்பகமான, ஆக்ககரமான முறையில் தொடர்ந்து வழங்கும் நோக்குடன் அதிகரிக்கும் செயல்பாட்டிற்கான செலவை ஈடுகட்ட இந்நடவடிக்கை அவசியமாகிறது,” என்று ஹொரைஸன் ஃபாஸ்ட் ஃபெரி அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது. வியாழக்கிழமைக்கு முன்பு வாங்கப்பட்ட படகு நுழைவுச்சீட்டுகளுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.
கடந்த மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டதைத் தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை கிட்டத்தட்ட முற்றிலும் முடங்கிப்போய்விட்டது.
அந்த நீரிணை வழியாகத்தான் உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெய் அளவில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போகும் கப்பல்களை ஈரானின் புரட்சிக் காவற்படை தாக்கி வருகிறது. ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 200 டாலர் என அதிகரிக்கலாம்; எதற்கும் உலகம் தயாராய் இருக்கவேண்டும் என்று ஈரான் புரட்சிக் காவற்படை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

