எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்கள் மீதான வன்முறை 48% கூடியது

எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்கள் மீதான வன்முறை 48% கூடியது

கோப்புப் படம்: எஸ்பிஎச்

29 Oct 2026 - 6:21 pm

2 mins read

சிங்கப்பூர் வேகமாக மூப்படைந்துவரும் நிலையில், மூத்தோரும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் போக்கு அதிகரித்துவருவது கவலைக்குரியதாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பான தரவுகளை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வியாழக்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்ட ‘குடும்ப வன்முறைப் போக்குகள் அறிக்கை 2026’ வெளியுலகிற்குக் கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், மூப்படையும் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சமூக சேவை மையங்கள் கையாண்ட மூத்தோர் வன்கொடுமை வழக்குகள் 290 என நிலையாக இருந்தது. அதே நேரத்தில், அதிக ஆபத்துள்ள எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்கள் மீதான வன்முறை 48 விழுக்காடு கூடி, மொத்தம் 104 வழக்குகள் பதிவாயின.

மூத்தோருக்கு எதிரான 290 வழக்குகளில் 246 வழக்குகளைக் குடும்ப சேவை மையங்கள் (எஃப்எஸ்சி) கையாண்டுள்ளன. அச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரில் மூப்படைந்த பெண்களே அதிகம். அதாவது, வன்முறைக்கு ஆளானவர்களில் 192 பேர் பெண்கள், 98 பேர் ஆண்கள். 

அவற்றில் 181 வழக்குகள் உடல் ரீதியான தாக்குதல்களாகவும், 83 வழக்குகள் உணர்வு உளவியல் ரீதியான துன்புறுத்தல்களாகவும் பதிவுசெய்யப்பட்டன.

ஆபத்துமிக்க இரண்டாம் நிலைப் பிரிவில், 2024ல் 70ஆக இருந்த எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெரியவர் மீதான வழக்குகள் 2025ல் 104ஆகக் கூடின. 

அவர்களில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 60 பேர், 18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் 44 பேர். 

குடும்ப வன்முறையால் ஆண்கள் பாதிக்கப்பட்டதும் இரட்டிப்படைந்துள்ளது; அதாவது, 24லிருந்து 48ஆக அதிகரித்தது. 

இந்த அதிகரிப்பிற்கு 2024ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கட்டமைக்கப்பட்ட முடிவெடுக்கும் கருவிகள்’ மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுவதே காரணம் என அமைச்சின் அறிக்கை விவரித்துள்ளது.

நிதிச் சுரண்டல், புறக்கணிப்பு போன்றவை கண்ணுக்குத் தெரியாததால் புகாராக கருதப்படுவதில்லையா என்பதன் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, “அறிக்கையில் நிதிச் சுரண்டல் தனிப் பிரிவாக காட்டப்படவில்லை. ஆனால், அமைச்சின் பாதுகாப்புச் சேவைப் பிரிவு, நிதிச் சுரண்டல் கவலைகள் சார்ந்த சம்பவங்களையும் கவனத்தில் கொள்கிறது. 2025ல் மட்டும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்கள் சார்ந்த 13 வழக்குகளில் நிதி சுரண்டல் குறித்த கவலைகள் வெளிப்பட்டன. அவ்வகையில் 2019 முதல் 2024 வரை ஆண்டுக்கு 1 முதல் 16 வழக்குகள் வரை இருந்தன,’’ என்று அமைச்சு விளக்கமளித்தது. 

ஒவ்வொரு வழக்கும் முழுமையாக ஆராயப்படுகிறது என்றும் பாதிப்புக்குள்ளாவோரின் பராமரிப்புத் தேவைகள், வாழ்க்கைச் சூழல், கிடைக்கும் ஆதரவு, குடும்பத்தினர் பராமரிப்பாளரால் புறக்கணிப்பு அல்லது நிதி சுரண்டல் உள்ளதா என்பதைப் பார்த்துத்தான் தலையிடுவதற்கான முடிவு எடுக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தனிமையில் இருக்கும், திறன் குறைந்துவரும், குறிப்பாக தாய்மொழி பேசும் மூத்தோரை எப்படிக் கண்டறிவீர்கள் என்ற கேள்விக்கு, சென்றடையும் திட்டங்கள்மூலம் தனிமையில் உள்ள மூத்தோரைச் சமூக நிறுவனங்கள் கண்டறிவதாக அமைச்சு பதிலளித்தது.

மூத்தோருக்கு எதிரான துன்புறுத்தல் போக்குகளை அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொடக்கத்திலேயே அதனைக் களைவதற்கான தலையீட்டை ஊக்குவிக்க சமூகப் பங்காளிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்