அக்டோபர் மாதம் விற்பனைக்கு விடப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளை (பிடிஓ) வாங்க 35,677 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு பிடிஓ வீடுகளை வாங்க விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாகப் பதிவானதில்லை.
சராசரியாக சுமார் நால்வர் ஒரு பிடிஓ வீட்டுக்கு விண்ணப்பித்தனர். விகிதம் 4.18ஆகப் பதிவானது. 2022 ஆகஸ்டில் அந்த விகிதம் 7.8ஆக இருந்தது.
சில பிடிஓ திட்டங்களில் வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் குறைவாக இருப்பது, ஒற்றையருக்கு ஏதுவாக இருக்கும் சில அம்சங்கள், பலரைக் கவரும் இடங்களில் சில வீடுகள் அமைந்திருப்பது போன்றவை இதற்கான காரணங்கள் எனக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அக்டோபரில் விற்பனைக்கு விடப்பட்ட பிடிஓ வீடுகளில் 8,573 வீடுகள் புதிய விற்பனைக் கட்டமைப்புக்குக்கீழ் விண்ணப்பங்களுக்குத் திறந்துவிடப்பட்டன. ஸ்டாண்டர்ட், பிளஸ், பிரைம் எனும் மூன்று பிரிவுகளில் அவை விற்பனைக்கு விடப்பட்டன.
சம்பந்தப்பட்ட குடியிருப்பு வட்டாரத்துக்கும் மத்தியப் பகுதிக்கும் இடையிலான தூரம், போக்குவரத்து வசதி போன்ற அம்சங்களின் அடிப்படையில் அந்த பிடிஓ வீடுகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன.
பிளஸ், பிரைம் பிரிவுகளில் வரும் பிடிஓ வீடுகளை வாங்குவதற்கான நிபந்தனைகள் கூடுதல் கடுமையானவை. மறுவிற்பனைக்கான குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டம் (MOP) 10 ஆண்டுகளாக இருப்பது அத்தகைய நிபந்தனைகளில் அடங்கும்.
அப்படியிருந்தும் பிளஸ், பிரைம் வீடுகளுக்கு நல்ல வரவேற்பிருந்ததாக கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

