வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், 7,964 புதிய ‘தேவைக்கேற்பக் கட்டப்படும்’ (பிடிஓ) வீடுகளைப் புதன்கிழமை (நவம்பர் 4) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இவற்றில் செம்பவாங் நார்த் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காத்திருப்புக் காலத்தைக் கொண்ட கிட்டத்தட்ட 1,300 வீடுகளும் அடங்கும்.
மொத்தமாக, இவ்வாண்டின் இந்த இறுதி விற்பனை நடவடிக்கையில் பிடோக், கேலாங், செம்பவாங், தெங்கா, தோ பாயோ, ஈசூன் ஆகிய வட்டாரங்களில் ஏழு திட்டங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
குடும்பங்களுக்கான வருமான உச்சவரம்பு $16,000ஆகவும் தனிமனிதருக்கான உச்சவரம்பு $8,000ஆகவும் உயர்த்தப்பட்ட மாற்றமும் இந்த விற்பனை முதல் நடைமுறைக்கு வருகிறது.
கால்டிகாட் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் அமையவுள்ள ஒரே முதன்மைப் பகுதித் (பிரைம்) திட்டமான தோ பாயோ ஹில்சைட், 11 விழுக்காட்டு உதவித்தொகை மீட்பு நிபந்தனையைக் கொண்டுள்ளது.
மூன்று ‘பிளஸ்’ திட்டங்கள் உள்ளன. பிடோக்கில் பேஷோர் ஒயாசிஸ், பேஷோர் செய்ல்ஸ், கேலாங்கில் மெர்பாத்தி மெடோ ஆகியவையே அவை. பிடோக் திட்டங்களுக்கு 9 விழுக்காட்டு மானிய மீட்பு விகிதமும் கேலாங் திட்டத்திற்கு 8 விழுக்காட்டு மானிய மீட்பு விகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மானிய மீட்பு என்பது, இத்தகைய வீடுகளை விற்கும்போது, விற்பனை விலை அல்லது மதிப்பீட்டு விலை, இதில் எது அதிகமோ அதில் குறிப்பிட்ட விழுக்காட்டை உரிமையாளர்கள் கழகத்திற்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
எஞ்சியுள்ள மூன்று திட்டங்கள் ஈசூன், தெங்கா, செம்பவாங் வட்டாரங்களில் ‘ஸ்டாண்டர்ட்’ வகைப்பாட்டின்கீழ் வருகின்றன. இந்த வீடுகளை விற்கும்போது மானிய மீட்பு நிபந்தனை இல்லை; மேலும் இவை ஐந்தாண்டு குறைந்தபட்ச வசிப்பிடக் காலத்தைக் கொண்டுள்ளன.
பிரைம் திட்டமான தோ பாயோ ஹில்சைடில் ஈரறை ‘ஃபிளெக்சி’, நாலறை வீடுகள் உட்பட 1,176 வீடுகள் இருக்கும்.
தோ பாயோ வட்டாரத்தில் முதன்முறையாக, ஏறக்குறைய 256 சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகளும் விற்பனைக்கு விடப்படும். இந்த வீடுகளில், சக்கர நாற்காலிகள் எளிதில் சென்றுவரும் குளியலறைகள் போன்ற மூத்தோருக்கு உகந்த வசதிகளும் அவர்கள் சுயமாக வாழ உதவும் சுகாதார, சமூகச் சேவைகளும் இடம்பெறும்.
பிடோக் நகரத்தின் பேஷோர் பேட்டையில் அமையவுள்ள இரண்டு பிளஸ் திட்டங்கள், ஒட்டுமொத்தமாக 2,492 வீடுகளை வழங்கும்.
சிறிய திட்டமான பேஷோர் ஒயாசிஸில் ஈரறை ஃபிளெக்சி, நாலறை வீடுகள் என 855 வீடுகளும் அவற்றுடன் சிறிய அங்காடி, கடைகள், பாலர்பள்ளி முதலியவை அமைந்திருக்கும்.
பெரிய திட்டமான பேஷோர் செய்ல்சில் ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை என 1,637 வீடுகள் இருக்கும்.
கேலாங்கில் உள்ள மற்றுமொரு பிளஸ் திட்டமான மெர்பாத்தி மெடோ, மாத்தார் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் 438 வீடுகளைக் கொண்டிருக்கும்.
புதிய செம்பவாங் நார்த் பேட்டையில் உள்ள செம்பவாங் ஆங்கர் திட்டத்தில், ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை, ஐந்தறை என 1,310 வீடுகள் இடம்பெறும்.
தெங்காவில் அமையவுள்ள பிளான்டேஷன் டியூ, ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகள், மூன்று தலைமுறை என 710 வீடுகளை வழங்கும்.
சென்சாருவில் அமையவிருக்கும் சென்சாரு ஏக்கர்ஸ் திட்டம், 1,582 ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகளைக் கொண்டிருக்கும்.
இந்த வீடுகளுக்கான விண்ணப்பங்கள் கழகத்தின் இணையவாசலில் நவம்பர் 11ஆம் தேதி இரவு மணி 11:59க்கு முடிவடையும்.
