சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிக்கான வளர்ச்சி முன்னுரைப்பு மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணிறிவு (ஏஐ) தொடர்பான தேவை அதிகரிப்பதால் உலகளாவிய பொருளியல் கண்ணோட்டத்தின் பின்னணியில் அந்த முன்னுரைப்பு இடம்பெறுகிறது.
எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தில் 2026ல் இரண்டு முதல் நான்கு விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, நவம்பரில் கணிக்கப்பட்ட பூஜ்யம் முதல் இரண்டு விழுக்காடு வரையிலான வளர்ச்சியிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான தேவை அதிகரிப்பதும் தங்க விலையும் உள்நாட்டு வளர்ச்சிக்கு சாதகமாக இருந்ததாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறியது.
இருந்தாலும் வர்த்தகப் பதற்றம், ஏஐ தொடர்பான முதலீடுகளில் ஏற்படும் சரிவு ஆகியவை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்று அது குறிப்பிட்டது.
2025ஆம் ஆண்டில் முக்கிய ஏற்றுமதி எதிர்பார்க்கப்பட்ட 4.8 விழுக்காட்டைவிட கூடியது. இது, 2024ஆம் ஆண்டின் 0.2 விழுக்காட்டிலிருந்து அதிகரித்தது. இதனால் இவ்வாண்டின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2025 நான்காவது காலாண்டில் ஏஐ தொடர்பான தேவைகள் அதிகமாக இருந்ததால் ஆண்டு அடிப்படையில் மின்னியல் துறை 12.7 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
“இதே வளர்ச்சி வேகம், 2026ஆம் ஆண்டிலும் எதிர்பார்க்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்னியல் துறை ஏற்றுமதி வலுவாக உள்ளது. நிறுவனங்களும் அதிக ஏற்றுமதிகளை எதிர்பார்க்கின்றன,” என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, மின்னியல் துறை சாரா பொருள்களின் ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 2025 நான்காவது காலாண்டில் 9.4 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. இது, 2025 ஆண்டு முழுவதற்குமான 2.5 விழுக்காடு வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
ஆண்டு இறுதியில் தங்கம், மருந்துகள் ஏற்றுமதி அதிகரித்ததால் அவை 2025 முழு ஆண்டுக்கான வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறியது.
அனைத்துலகப் பண நிதியம், இவ்வாண்டுக்கான உலகளாவிய பொருளியல் வளர்ச்சிக் கணிப்பை, முன்பு மதிப்பிடப்பட்ட 3.1 விழுக்காட்டிலிருந்து 3.3 விழுக்காட்டுக்கு உயர்த்தியிருக்கிறது.

