முனைவர் ச. மீனாட்சியின் ‘ஒளவையார் காட்டும் வழி’ என்ற மின்னூல் அறிமுக நிகழ்ச்சியின் கலந்துரையாடல் அங்கம், வழக்கமான வெளியீட்டு விழாக்களிலிருந்து மாறுபட்டு அமைந்திருந்தது.
விக்டோரியா ஸ்திரீட் தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் கலந்துரையாடல், குழு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு நூலிலிருந்து கற்ற படிப்பினைகளை மற்றவர்கள் முன்னிலையில் விளக்கினர்.
தமிழர் திருநாள் விழா 2026ஐ ஒட்டி நடைபெற்ற சிறப்புத் தமிழ் இலக்கிய நிகழ்ச்சி தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் இமேஜினேஷன் அறையில் பிப்ரவரி 22ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடந்தேறியது. முன்பதிவு செய்த பங்கேற்பாளர்களும் நேரில் வந்தவர்களும் கலந்து கொண்டு அரங்கத்தை நிரப்பினர்.
ஒளவையாரின் சிந்தனைகள்: இக்காலத்திற்கு ஏற்ற விளக்கங்கள்
இடைக்கால ஔவையாரின் 25 பாடல்களின் கருத்துகள், இக்காலத்தில் அவை எந்தெந்தச் சூழல்களில் பொருந்தக்கூடியவை என்பதற்குரிய சிந்தனையும் சுருக்கமான ஆங்கில விளக்கமும் கொண்ட இந்நூலை, பங்கேற்ற அனைவரும் தங்களது திறன்பேசிகளில் படித்திருந்தனர்.
புதுமையான வாசிப்பு, கலந்துரையாடல் போன்ற அமைப்பில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. பங்கேற்பாளர்கள் முன்பதிவில் தெரிவித்திருந்த விருப்பத் தலைப்புகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். 30 நிமிடங்கள் ஒளவையார் பாடல்களை வாசித்து ஆராய்ந்த பின்னர், தங்கள் கருத்துகளை அவர்கள் பகிர்ந்தனர்.
பண்டைய ஆட்சி முறைகள், பொதுநெறிகள், தமிழ் வரலாறு மற்றும் அரசாட்சி, குடும்பப் பண்புகள் மற்றும் உடன்பிறந்தோரின் ஒற்றுமை, கோவில் மரபுகள் மற்றும் தமிழ் மந்திரம் ஓதுதல், திருநீறு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் குறித்த விரிவான சிந்தனைகளைப் பார்வையாளர்களும் முன்வந்து பேசினர்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் இசக்கி செல்வி , இந்நிகழ்ச்சி தமிழர் திருநாள் விழாவின் ஒரு பகுதியாக இடம்பெற்றதைக் குறிப்பிட்டார்.
அறநெறிகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் முயற்சி
துணைப்பாட ஆசிரியரும் பேச்சாளருமான மஹ்ஜபீன், திருநீறு குறித்த பாடல் பற்றிக் கேள்வி எழுப்பி, ஆன்மிக வாழ்வில் தமிழின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆழமான விளக்கத்தை நாடினார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழாசிரியர் ஆண்டாள் , “கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு” என்ற புகழ்பெற்ற வரியை உள்ளடக்கிய பாடல் பற்றிக் கருத்துரைத்தார். “அறிவின் எல்லையின்மையையும் பணிவின் அவசியத்தையும் வலியுறுத்தி, எறும்புகளுக்கும் அவற்றின் அளவுக்கேற்ற திறன்கள் உள்ளன என ஔவையார் பாடியுள்ளார் என்றார் அவர்.
சிறப்புப் பேச்சாளர் வெங்கட்ராமன், ஒளவையார் என்பது ஒருவரை மட்டும் குறிக்காது; அது பல நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல பெண்பாற் புலவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டமாகும் என்றார். “மொழிநடை மற்றும் காலச்சூழல் அடிப்படையில் அவர்களின் படைப்புகளை வேறுபடுத்த முடியும்,” என்றும் அவர் கூறினார்.

