போட் கீ வட்டாரத்தில் உள்ள கடைவீடு ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து இலேசான தீக்காயம் ஏற்பட்ட ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (ஏப்ரல் 21) காலை அச்சம்பவம் நிகழ்ந்தது. போட் கீயில் 16 சர்க்குலர் ரோட்டில் இருக்கும் ‘சார்க்கோல் முகாட்டா’ (charcoal Mookata) உணவகமான ‘டாம் யும் குங்ஃபு’ (Tom Yum Kungfu) உணவகம் பயன்படுத்தும் இடத்தில் தீ மூண்டதென ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
சம்பந்தப்பட்ட கடைவீட்டிலிருந்து கறும் புகை வெளியாவதும் சாலையில் பல தீயணைப்பு வாகனங்கள் நின்றுகொண்டிருந்ததும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ரேச்சல் ஹோ பகிர்ந்துகொண்ட படத்தில் காணப்பட்டன.
காலை 10 மணிக்கு தீ குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. முதல் தளத்தில் உள்ள உணவகத்தின் சமையலறைப் பொருள்களுக்கும் தீக்கும் தொடர்பிருப்பதாக படை குறிப்பிட்டது.
நீரைப் பீய்ச்சியடித்து 10 நிமிடங்களுக்குள் தீ அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இலேசான தீக்காயம் ஏற்பட்ட ஒருவர், குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குள் கட்டடத்திலிருந்து வெளியேறியதாகவும் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
‘டாம் யும் குங்ஃபு’ உணவகம் திங்கட்கிழமை மூடப்பட்டிருக்கும் என்று அதன் ஊழியர் ஒருவர் கூறினார்.