தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விற்பனைக்கு விடப்படாத பிடிஓ வீடுகளுக்கான பணிகள் தொடக்கம்

2 mins read
8772502d-7d52-4b00-a2df-890145465a1a
முன்பு கெப்பல் கிளப் இருந்த பகுதியில் பெர்லாயார் பேட்டை அமைகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்னும் விற்பனைக்கு விடப்படாத நூற்றுக்கணக்கான புதிய, தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகள் தெம்பனிசிலும் புதிதாக உருவாக்கப்படும் பெர்லாயார் பேட்டையிலும் கட்டப்பட்டு வருகின்றன.

முன்பு கெப்பல் கிளப் நிலையம் இருந்த பகுதியில் பெர்லாயார் பேட்டை உருவாகிறது.

இவ்விரு பிடிஓ திட்டங்களும் இம்மாதம் நடைபெறும் விற்பனை நடவடிக்கையில் இடம்பெறவில்லை. இவ்வாண்டின் கடைசி பிடிஓ விற்பனை நடவடிக்கையான அக்டோபர் நடவடிக்கையில் 10 பிடிஓ திட்டங்களில் உள்ள வீடுகள் விற்பனைக்கு விடப்படுகின்றன.

அப்படியென்றால் இவ்விரு பிடிஓ திட்டங்களும் குறைந்தபட்சம் அடுத்த ஆண்டுதான் விற்பனைக்கு விடப்படும்.

பெர்லாயார் பேட்டையில் 1,039 வீடுகளைக் கொண்ட திட்டத்துக்கான அடிப்படைக் கட்டுமானப் பணிகளை வீவக தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் நான்கு புளோக்குகள் இருக்கும். ஒவ்வொரு புளோக்கிலும் 24லிருந்து 40 தளங்கள் இருக்கும்.

அக்டோபர் விற்பனை நடவடிக்கையில் இடம்பெறும் பெர்லாயார் ரெசிடன்சஸ் திட்டமும் பெர்லாயார் பேட்டையில் அமைகிறது. அதுவே அந்த வட்டாரத்தில் அமையும் முதல் பிடிஓ திட்டமாகும். அதில் 870 வீடுகள் விற்பனைக்கும் 200 வீடுகள் வாடகைக்கும் விடப்படும்.

மேம்பாட்டுப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு பெர்லாயாரில் மொத்தம் 7,000 வீவக வீடுகளும் 3,000 தனியார் வீடுகளும் இருக்கும்.

பெர்லாயாருக்கான வீவக பெருந்திட்டத்தின்படி, அங்கு அமையவிருக்கும் புதிய பிடிஓ திட்டத்தில் இடம்பெறும் சில வீடுகளிலிருந்து கெப்பல் துறைமுகத்தைக் தெளிவாகக் காணலாம். புதிய திட்டம், தெலுக் பிளாங்கா பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 500 மீட்டருக்கு அப்பால் அமைகிறது.

அத்திட்டம், பெர்லாயார் ரெசிடன்சஸ் திட்டத்தைவிட தெலுக் பிளாங்கா நிலையத்திலிருந்து அதிகத் தொலைவில் இருக்கும்.

அத்துடன், தெம்பனிஸ் ஸ்திரீட் 22ல் வீவக 284 வீடுகளைக் கொண்ட பிடிஓ திட்டத்தை மேற்கொண்டு வருகிறது . முன்பு அங்சானா தொடக்கப் பள்ளி இருந்த இடத்தில் அத்திட்டம் அமைகிறது.

அந்தத் திட்டத்திற்காக கட்டுமானப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கின. வரும் 2028 இறுதிக் காலாண்டிற்குள் கட்டுமானப் பணிகள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று புளோக்குகளில் அந்த பிடிஓ வீடுகள் அமையும். ஒவ்வொரு புளோக்கிலும் 10 தளங்கள் இருக்கும்.

அந்த பிடிஓ திட்டத்தில் வணிக வசதிகளும் இடம்பெறும்.

அங்சானா தொடக்கப் பள்ளி 2022 ஜூன் மாதம் தெம்பனிஸ் ஸ்திரீட் 22லிருந்து 51 தெம்பனிஸ் ஸ்திரீட் 61க்கு இடம் மாறியது. கிரிஃபித்ஸ் தொடக்கப் பள்ளியையும் சியாவ்னான் தொடக்கப் பள்ளியையும் இணைத்து 2015ல் அங்சானா தொடக்கப் பள்ளி உருவாக்கப்பட்டது.

தெம்பனிஸ் ஸ்திரீட் 22ல் அமையும் பிடிஓ வீடுகளும் அதிகபட்சம் அடுத்த ஆண்டுதான் விற்பனைக்கு விடப்படும். அவற்றுக்கான காத்திருப்பு நேரம் பெரும்பாலும் மூவாண்டுகளுக்குக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்