மவுண்ட் பிளசென்ட் வட்டாரத்தின் இரண்டாம் கட்டிமுடிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டமும் (பிடிஓ) பீஷானில் அமைக்கப்படும் அதே வகை வீடுகளும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முன்பதிவுகளுக்கு விடவுள்ள வீடுகளில் அடங்கும்.
குறைவான காத்திருப்பு நேரங்களுடன் உருவாக்கப்படும் பிடிஓ திட்டத்தில் 4,300 வீடுகள் விற்பனைக்கு விடப்படும். அவை தோ பாயோ, பீஷான், தெங்கா ஆகிய இடங்களில் தலா ஒரு திட்டமும் தெம்பனிஸ் வட்டாரத்தில் இரு பிடிஓ வீடமைப்புத் திட்டமும் பிப்ரவரி மாத விற்பனை முன்பதிவுகளில் இடம்பெறும்.
திட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடங்களும், வீடுகளின் அமைப்பும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) புதன்கிழமை (நவம்பர் 4) வெளியிட்ட தரவுகளில் விவரிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வழக்கத்தைவிட குறைவான வீடுகளே விற்பனைக்கு வரவிருப்பதால், விண்ணப்பங்கள் போட்டித்தன்மையுடன் அமையும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வீடுகளுக்கான தேவை, இதர வீவக திட்டங்களில் எஞ்சிய வீடுகளின் விற்பனையோடு ஒரே நேரத்தில் இடம்பெறுவதும் கவனத்துக்குரியது. அதன்படி, வீவக கட்டிமுடிக்கப்பட்ட அல்லது கட்டப்படும் ஏறத்தாழ 5,000 வீடுகளை விற்பனைக்கு விடும் என்று தெரிகிறது.
பீஷான், தோ பாயோவில் வரவிருக்கும் வீடமைப்புத் திட்டங்களும், தெம்பனிஸ் வட்டாரத்தில் அமையும் 460 வீடுகள் திட்டமும் பலரையும் வெகுவாகக் கவரும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் குடியிருப்புகளுக்கு அருகில் புதிய திட்டங்கள் அமைந்துள்ளதால் அது பலரின் ஆர்வத்தைத் தூண்டும் என்று ‘பிராப்நெக்ஸ்’ சொத்து நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் வோங் சியு யிங் கருத்துரைத்தார்.
தோ பாயோவில் கட்டப்படும் மவுண்ட் பிளசெனட் எஸ்டேட்டின் இரண்டாம் பிடிஓ திட்டத்தில் 1,140 வீடுகள் உள்ளன. அவை தாம்சன் ஈஸ்ட்-கோஸ்ட் எம்ஆர்டி வழித்தடத்தில் அமையவுள்ளன.
முதன்மைப் பகுதித் (பிரைம்) திட்டமான அதில் 450 இரண்டு அறை வீடுகள், 90 மூன்று அறை வீடுகள், 600 நான்கறை வீடுகள் கட்டப்படும். உணவகங்கள், பாலர்பள்ளி, முதியோர் மூப்படையும் மையம், குடியிருப்பாளர் தொடர்பு நிலையம் போன்ற பற்பல வசிப்போருக்கான தனிப்பட்ட வசதிகளும் அதில் உள்ளன.
மவுண்ட் பிளசென்ட் கிரெஸ்ட் எனப்படும் அதன் முதல் பிடிஓ (பிரைம்) திட்டம் 2025ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
