தெம்பனிசில் உள்ள பைன்வேல் கூட்டுரிமை (Pinevale condominium) அடுக்குமாடி வீட்டு வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) மாலை கார் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது.
ஸ்டோம்ப் தளத்தில் அச்செய்தி வெளியானது. அத்தளத்தின் பயனரான S என்பவர் சம்பவம் பதிவான படங்களைப் பதிவேற்றம் செய்தார்.
கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததும் தீயணைப்பாளர்கள் அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் அப்படங்களில் காணப்பட்டன. வழிப்போக்கர்கள் சம்பவத்தைத் தங்களின் கைப்பேசிகளில் பதிவுசெய்ததும் படங்களில் தெரிந்தது.
4 தெம்பனிஸ் ஸ்திரீட் 73ல் தீ மூண்டதாக ஞாயிற்றுக்கிழமை மாலை 7.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஸ்டோம்ப் கேள்விகளுக்குப் பதிலளித்தது.
காரின் இயந்திரம் தொடர்புடைய அந்தத் தீ, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் குழாயின் மூலம் அணைக்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
சம்பவத்துக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.