287 மாணவர்களுக்குச் செட்டியார்கள் கோயில் குழும உதவி நிதி விருதுகள்

2 mins read
1f256910-20c6-4cd6-94ec-f2365624f92f
கல்வியில் சிறந்து விளங்கிய தொழில்நுட்பக் கல்விக் கழக முதலாமாண்டு மாணவியான கீர்த்தனாவுக்கு உபகாரச் சம்பளத்திற்கான விருதை வழங்கினார் கல்வி மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி. உடன் மாணவியின் தாயார் திருமதி சாந்தி (இடமிருந்து 2வது). - படம்: செட்டியார்கள் கோயில் குழுமம்
multi-img1 of 3

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், செட்டியார்கள் கோயில் குழுமம் அவர்களுக்கு உதவித்தொகை முதல் உபகாரச் சமபளம் வரை ஏறத்தாழ $100,000 மதிப்பிலான நிதியுதவிகளை வழங்கிச் சிறப்பித்தது.

தொடர்ந்து 13வது முறையாக நடைபெற்ற கல்வி உதவி நிதி விருதுகள் விழாவில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்விக் கழகம் உள்ளிட்டவற்றில் பயிலும் 287 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் வளாக மண்டபத்தில், ஜனவரி 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிறப்புரையாற்றிய திரு சையது ஹருன், வாய்ப்புகளை உருவாக்குவதிலும் ஒன்றிணைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

“அறிவை நாடித் தேடுவதன் நோக்கம் தேர்ச்சி சார்ந்த முடிவுகளைப் பற்றியது மட்டுமன்று. மாறாக, வாழ்வில் உங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய மீள்திறன், நற்பண்புகள், செயலாற்றல் உள்ளிட்டவைகளை வளர்த்துக்கொள்வது,’’ என்றார் அவர்.

கற்றலை வாழ்நாள் முழுதும் தொடரும் பழக்கமாக மாணவர்கள் கைக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட திரு சையது ஹருன், தொடர்ந்து அவர்கள் சமூகத்திற்குச் சேவையாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

‘‘கல்வியில் உன்னதம் முக்கியமானது. என்றாலும், அது  ஒன்று மட்டுமே பள்ளியில் உங்களது ஒரே கவனமாக இருக்கக்கூடாது. விருப்பங்களை ஆராயவும் சிந்தனைக்குச் சவால் விட்டு உங்கள் எல்லைகளை விரிவாக்கும் அனுபவங்களைத் தேடவும் நேரத்தை ஒதுக்குங்கள். சமூகத்திற்குப் பங்காற்றி சேவையளிக்கும் வாய்ப்புகளை நாடுங்கள்,’’ என்றார் திரு சையது ஹருன். 

நிதியுதவி பெற்றவர்களில் சிலர் இந்த வாய்ப்பு தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து தமிழ் முரசிடம் கருத்துரைத்தனர்.

கல்வியில் சிறப்புற்று விளங்கி, இவ்வாண்டிற்கான உபகாரச் சம்பளம் பெற்றவர்களுள் இடம்பிடித்திருந்தனர் சகோதரிகளான ஸ்ரீயா ஸ்ரீ, 17, மற்றும் இவினா ஸ்ரீ,15. 

செட்டியார்கள் கோயில் குழுமத்தின் 13வது கல்வி உதவி நிதி விருதுகள் விழாவில், கல்வி மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷியிடமிருந்து உபகாரச் சம்பள விருதைப் பெறுகிறார் மாணவி ஸ்ரீயா ஸ்ரீ.
செட்டியார்கள் கோயில் குழுமத்தின் 13வது கல்வி உதவி நிதி விருதுகள் விழாவில், கல்வி மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷியிடமிருந்து உபகாரச் சம்பள விருதைப் பெறுகிறார் மாணவி ஸ்ரீயா ஸ்ரீ. - படம்: செட்டியார்கள் கோயில் குழுமம்
கல்வியில் சிறப்புற்று விளங்கி இவ்வாண்டிற்கான உதவி நிதி பெற்றவர்களுள் இடம்பிடித்தார் உயர்நிலைப் பள்ளி மாணவியான இவினா ஸ்ரீ.
கல்வியில் சிறப்புற்று விளங்கி இவ்வாண்டிற்கான உதவி நிதி பெற்றவர்களுள் இடம்பிடித்தார் உயர்நிலைப் பள்ளி மாணவியான இவினா ஸ்ரீ. - படம்: செட்டியார்கள் கோயில் குழுமம்

‘‘இந்த உதவித் தொகை கல்விக் கட்டணத்தைச் செலுத்தப் பெரிதும் உதவும். எஞ்சிய தொகையைச் சேமிப்போம். ஒருவர் மீது மற்றவர் பரிவுகாட்டும் சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கான நினைவூட்டல் இந்த நிகழ்ச்சி,’’ என்றனர் சகோதரிகள்.

இதற்கிடையே, கல்வி நிதி உதவியைக் காட்டிலும் இந்நிகழ்ச்சியின்மூலம் கிடைக்கும் அனுபவம் மிகச்சிறந்தது என்று கூறினார் தொழில்நுட்பக் கல்விக் கழக முதலாமாண்டு மாணவியான கீர்த்தனா, 20.

இந்த உதவி, கல்வியில் தொடர்ந்து சாதிக்கவும், அவ்வழியில் தாம் அடையும் சாதனைகளால் பெற்றோரைப் பெருமையுறச் செய்யவும் உற்சாகப்படுத்துகிறது என்று அவர் சொன்னார். அவருக்கு 600 வெள்ளி மதிப்பிலான உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.

மகள் விருது பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் கீர்த்தனாவின் தாயார் சாந்தி, 54. “குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் ஒருவர்தான். எனினும் கல்வி கற்கும் இரு பிள்ளைகள் உள்ளனர்,” என்று அவர் சொன்னார்.

‘‘தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த உதவி நிதி, கல்விச் செலவுகளைச் சமாளிக்க உதவும். மாணவர்கள் தொடர்ந்து இத்தகைய விருதுகளை வென்று வாழ்க்கையில் சிறக்கவும் நம்பிக்கை அளிக்கும்,’’ என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்