சிங்கப்பூரில் உள்ள பாலர் பள்ளிகளில் பிள்ளைகள் தவறான முறையில் கையாளப்படுவதன் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கூடுதல் விழிப்புநிலை இருந்து வருவது, காணொளிச் சான்றுகள் மேலும் எளிதில் கிடைப்பது ஆகியவை அதற்கு முக்கியக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து எல்லா பாலர் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு, பிள்ளைகள் தவறான முறையில் கையாளப்பட்ட 227 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த எண்ணிக்கை, 2023ல் பதிவான 169ஐவிட அதிகமாகும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு இத்தகவல்களை வெளியிட்டது.
பிள்ளைகள் தவறான முறையில் கையாளப்படுவது என்பது, அவர்களின் நலன் அல்லது பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய செயல்களைக் குறிக்கிறது. வேண்டுமென்றே கவனிக்காமல் இருப்பது, உடலில் வலி அல்லது காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் தண்டிப்பது போன்றவை அத்தகைய செயல்களில் அடங்கும்.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் நிலையங்களுக்கான 2025 பயன்பாட்டு நெறிமுறைகளின்படி பாலர் பள்ளி ஊழியர்கள், பிள்ளைகளை அடிக்கக்கூடாது; அவர்களிடம் கத்தக்கூடாது; வார்த்தைகள் மூலமாகவோ உடல்ரீதியாகவோ பயமுறுத்தக்கூடாது; மனத்தளவில் நீண்டகாலம் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது.
கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, அத்தகைய 195 சம்பவங்களின் தொடர்பில் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தியுள்ளது.
சென்ற ஆண்டு, விசாரணையின் மூலம் நிரூபிக்கப்பட்ட அத்தகைய சம்பவங்களின் விகிதம் 100,000க்கு 35 என்ற அளவில் இருந்தது. 2023ல் இவ்விகிதம் 100,000க்கு 26ஆகப் பதிவானது.
சம்பவங்களை அடையாளங்கண்டு அவற்றைப் பற்றிப் புகாரளிப்பதன் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர் கூடுதல் விழிப்புடன் இருப்பது, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காணொளிகள் மேலும் எளிதில் கிடைப்பது ஆகியவை அதற்கான காரணங்கள் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த வாரம், பாலர் பள்ளிகளில் இடம்பெற்றதாக நம்பப்படும் மேலும் இரு பிள்ளைத் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் தலைதூக்கின. எட்டு மாதக் குழந்தையின் தலையில் அடித்ததாகவும் பாலூட்டியபோது வேறொரு 16 மாதக் குழந்தையை அடித்ததாகவும் நம்பப்படும் பெண்மீது வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதற்கு முதல்நாளான வியாழக்கிழமை பிள்ளைகளைத் துன்புறுத்தியதாக நம்பப்படும் மற்றுமொரு பாலர் பள்ளி ஆசிரியர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து, பிள்ளைகள் சென்றுவரக்கூடிய வகுப்பறைகள், நடவடிக்கை அறைகள், விளையாட்டு அறைகள் போன்ற பாலர் பள்ளிப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

