குடும்ப வன்முறை குறித்த புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

குழந்தைத் துன்புறுத்தலுக்கு ஆளாவோர், துணையால் துன்புறுத்தப்படும் ஆபத்து அதிகம்: ஆய்வு

4 mins read
277299a8-085c-47f6-a78d-87e57a09f084
குழந்தைத் துன்புறுத்தலுக்கு ஆளாவோர், துணையால் துன்புறுத்தப்படும் ஆபத்து அதிகம் என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள், பெரியவர்களானதும் அவர்களின் துணையினால் துன்புறுத்தப்படும் ஆபத்து அதிகம் என்று குடும்ப வன்முறை குறித்த புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தொடக்ககால அதிர்ச்சி அனுபவங்களின் பாதிப்பையும், துன்புறுத்தல் சுழற்சியை உடைக்க தலையீடு தேவை என்பதையும் அது காட்டுவதாக ஆய்வை மேற்கொண்ட தேசிய சமூக சேவை மன்றத்தின் மொழிபெயர்ப்பு ஆய்வுப் பிரிவின் இயக்குநர் எரிக் ஹூ கூறினார்.

குடும்ப வன்முறைக்கான மூல காரணங்களைச் சரிசெய்வதிலும், அத்தகைய வன்முறையைத் தடுப்பதிலும், நடத்தைப் போக்கு குடும்பங்களுக்குள் எவ்வாறு வழிவழியாகத் தொடர்கிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானது என்று டாக்டர் ஹூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் விளக்கினார்.

அந்த ஆய்வு, கிட்டத்தட்ட 200,000 சிங்கப்பூர் குடியிருப்பாளர்களின் அரசாங்கப் பதிவுகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட சமூக சேவைகள் போன்ற நிர்வாகத் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட தரவுகளிலிருந்து தனிநபர்கள் அடையாளம் காணப்படவில்லை.

தற்போது நடைபெற்று வரும் ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் 2024 நவம்பரில் நடைபெற்ற ஆசியக் குடும்ப மாநாட்டில் பகிரப்பட்டன.

ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்:

- குழந்தையாக இருந்தபோது துன்புறுத்தலுக்கு ஆளான ஒருவர், குழந்தைத் துன்புறுத்தலுக்கு ஆளாகாத ஒருவருடன் ஒப்பிடுகையில், பெரியவரானதும் துணைவரால் துன்புறுத்தப்படுவதற்கு 1.8 மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

- வன்முறைக்கு ஆளான பெற்றோரின் பிள்ளைகள், அத்தகைய பாதிப்புகள் இல்லாத பெற்றோரின் பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்பு 2.1 மடங்குவரை அதிகம்.

- குடும்ப வன்முறை நிகழும் குடும்பங்களில், நிதி உதவி, கட்டாய ஆலோசனைத் திட்டம் போன்ற பாதுகாப்புச் சேவைகள் வழங்கப்படுவது, சிறார் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஆபத்தைக் குறைக்கலாம். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நிர்வகிக்கும் இந்தத் திட்டமும் இதர பாதுகாப்புச் சேவைகளும் குடும்பங்களுக்கு திறன்களையும் ஆதரவையும் வழங்கி, பிரச்சினைகளை மரியாதையுடனும் வன்முறையற்ற முறையிலும் தீர்க்க உதவுகின்றன என்று டாக்டர் ஹூ கூறினார்.

குழந்தைப் பருவத்தில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், பெரியவர்களானதும் அவர்களின் துணைவரால் துன்புறுத்தப்படுவதற்கு ஒரு காரணம் பிணைப்புக் கோட்பாடு என்று அழைக்கப்படும் கட்டமைப்பால் விளக்கப்படலாம்.

ஒரு குழந்தையின் புலனுணர்வு, சமூக மற்றும் உணர்வு ரீதியான வளர்ச்சி ஆகியவற்றில், பெற்றோர் போன்ற பராமரிப்பாளர்களுடனான உறவுகளினால் தாக்கம் ஏற்படுவதை பரவலாக ஆய்வு செய்யப்பட்ட மனித பிணைப்புப் கோட்பாடு சுட்டுகிறது. இந்த தொடக்ககால உறவுகளில் ஏற்படும் இடையூறுகள், பிற்காலத்தில் அவை உருவாக்கும் உறவுகளில் சிக்கல்களுக்கு எளிதில் ஆட்பட வழிவகுக்கும்.

எடுத்துக்காட்டாக, உணர்ச்சி ரீதியான ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டிய பெற்றோர் தீங்கு அல்லது பயத்தின் மூல காரணமாகும்போது, துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தை, பாதுகாப்பற்ற பிணைப்பு பாணிகளை உருவாக்கிக்கொள்ளலாம். இது அக்குழந்தையின் வரம்புகள் குறித்த புரிதல், நம்பிக்கை மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றிய புரிதலையும் பாதிக்கக்கூடும்.

இதன் விளைவாக, ஆரோக்கியமற்ற உறவுமுறைகளை அடையாளம் காண்பது கடினமாகலாம் அல்லது துன்புறுத்தலை சகித்துக்கொள்ளும் மனப்போக்கு வரலாம்.

இந்தக் காரணிகள், தகாத உறவில் இருப்பதற்கான சாத்தியத்தை அதிகரித்து, தலைமுறை தலைமுறையாக வன்முறைச் சுழல் நீடிப்பதாக டாக்டர் ஹூ கூறினார்.

தவறான உறவுகளில் இருக்கும் பெரியவர்கள், ‘இதைவிடச் சிறந்த வாழ்க்கைக்கு நான் தகுதியற்றவர்’ என்றோ அல்லது அவர்களின் தவறான வாழ்க்கைத் துணையைத் தவிர வேறு யாரும் அவர்களை நேசிப்பதில்லை என்றோ நினைப்பதாக ‘கேர் கார்னர் சிங்கப்பூர்’ அமைப்பின் குடும்ப, சமூக சேவையின் துணை இயக்குநர் மார்ட்டின் சோக் கூறினார்.

சிலர் தங்களைத் துன்புறுத்துபவர் பற்றிப் புகார் செய்தால் உறவை இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறார்கள்.

வீட்டில் வன்முறையை அனுபவிக்கும் பிள்ளைகள், தங்கள் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டு, பின்னர் அதே வழியில் நடக்கலாம் என்றும் திரு சோக் குறிப்பிட்டார்.

“அவர்களைப் பொறுத்தவரை சிக்கலைச் சமாளிப்பதற்கான ஒரு சாதாரண வழியாக வன்முறை இருக்கலாம். அல்லது வன்முறை குறித்து உணர்திறன் அற்றவர்களாக ஆகிறார்கள். மேலும் அவர்கள் வன்முறை தவறு என்று நினைப்பதில்லை,” என்றார் அவர்.

பல அழுத்தங்களைச் சமாளிக்க முடியாதபோது சில பெற்றோர் அதைத் தங்கள் அன்புக்குரியவர்களான வாழ்க்கைத் துணை, குழந்தைகளிடம் காட்டுவதாக திரு சோக் கூறினார்.

2023ஆம் ஆண்டில் 2,008 புதிய குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 1,741 ஆக இருந்தது என்று 2024 செப்டம்பரில் வெளியிடப்பட்ட சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் குடும்ப வன்முறைப் போக்கு அறிக்கை சுட்டியது.

குறிப்புச் சொற்கள்
துன்புறுத்தல்குடும்ப வன்முறைசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகுழந்தைசிங்கப்பூர்பெற்றோர்