ஒரு சிங்கப்பூர் நிறுவனம் சீனாவில் ஒரு மருத்துவமனையை நடத்துகிறது. சிகிச்சை பெற அதிகமான வெளிநாட்டவரை இந்தப் புதிய மருத்துவமனைக்கு ஈர்க்கவேண்டும் என்று அந்நிறுவனம் எண்ணம் கொண்டுள்ளது.
உலகின் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியல் நாடான சீனாவில், மருத்துவச் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என்று வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன.
பெரெனியல் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் 139 மில்லியன் டாலர் (S$170 மில்லியன்) மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனை வட சீனாவின் தியான்ஜின் நகரில் இவ்வாண்டு தொடக்கத்தில் திறக்கப்பட்டது. இது, முழுமையாக வெளிநாட்டவர் நடத்தும் முதல் சீன மருத்துவமனையாகும்.
சிகிச்சைக்காக ரஷ்யா, மத்திய கிழக்கு, தென்கிழக்காசியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருவோரிடமிருந்து 30 விழுக்காட்டு வருமானத்தை ஈட்டுவது இந்த மருத்துவமனையின் இலக்கு. அதன் மூலம், மருத்துவச் சுற்றுப்பயணத்துக்குப் பிரபலமாக இருந்துவரும் சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் போட்டி தரும் அளவுக்கு சீனா வளரும் என்று தியான்ஜின் மருத்துவமனை நம்பிக்கை கொண்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் முழுமையாக வெளிநாட்டவரால் நடத்தப்பட கடந்த 2024ஆம் ஆண்டுமுதல் சீனா அனுமதித்து வருகிறது. முன்னதாக தனியார் நிறுவனங்களை நடத்த சீன நிறுவனங்கள் பங்காளிகளாக இருப்பது கட்டாயம்.
நாட்டின் இதர பொது மருத்துவமனைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ளுமாறு சீனாவின் சுகாதாரக் கட்டுப்பாட்டு அமைப்பு, தியான்ஜின் மருத்துவமனையை ஊக்குவித்துவருகிறது. அந்த மருத்துவமனையின் தலைவரான டேனியல் லியு இந்த வாரம் அளித்த நேர்காணலில் அதைத் தெரிவித்தார்.
“சீனாவில் மருத்துவச் சுற்றுலா இன்னும் ஒரு துறையாக உருவெடுக்கவில்லை. அதை வளர்ச்சியடையச் செய்ய நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்,” என்று அவர் சொன்னார்.
“கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் சில சிறப்பம்சங்கள் அனைத்துலக அளவில் ஒப்பிடக்கூடிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளன,” என்றும் அவர் விவரித்தார்.

