பருவநிலை மாற்றம், சிங்கப்பூர் விதிவிலக்கல்ல: பொதுப் பயனீட்டுக் கழகம்

2 mins read
825bfdb5-de6f-4d41-84b3-78876ad5e2bb
பொதுப் பயனீட்டுக் கழக தலைமை நிர்வாகி ஒங் சி சின் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பருவநிலை மாற்றத்தால் நிகழும் வெள்ளத்தை முழுமையாகச் சிங்கப்பூரில் தடுத்துவிடமுடியாது என்று பொதுப் பயனீட்டுக் கழகத் தலைமை நிர்வாகி திரு ஓங் சி சின், கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உடன் நடந்த நேர்காணலில் தெரிவித்தார்.

இருப்பினும் அரசாங்கம் வடிகால் உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடுகள் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு மேம்பட்டாலும் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் திடீர் வெள்ளங்களின் குடிமக்களின் மீள்தன்மை மிகமுக்கியமானது என்றதுடன் மேலும் பலவற்றை அவர் பகிர்ந்தார்.

பொதுப் பயனீட்டுக்கழகம் வெள்ள நடைமுறைகளை மேம்படுத்திவருகிறது. அதன்படி, ‘கூகல்’ வரைபடங்களின் மூலம் முன்னெச்சரிக்கை அறிவிப்பும் நீர் மட்டத்தைக் கண்காணிக்கும் உணர்கருவிகளை ஒருங்கிணைப்பதும் உள்ளடங்கும். அதனை 2028ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது சிங்கப்பூர் தேசிய தண்ணீர் முகவை என அழைக்கப்படும் கழகம்.

வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சிங்கப்பூர் அடியெடுத்துவைக்கும் இந்நேரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து திரு ஒங் விளக்கினார்.

பருவநிலை மாற்றத்தால் மழையைச் சரிவர கணிக்கமுடியாது. எனவே அரசாங்கம் திடீர் வெள்ளத்தைச் சமாளிக்க விரிவான நடைமுறைகளை ஆராய்கிறது. முக்கியமாக சமூக மீள்திறன் கட்டமைப்பும் அவற்றில் ஒன்றாகும்.

சிங்கப்பூரில் நடந்த மூன்றாம் பருவநிலை ஆய்வில், பூமியின் வெப்பத்தை அதிகரிக்கும் பலவகை வாயுக்கள் வெளியேறுகின்றன. அவற்றால் வளிமண்டலம் பாதிக்கப்பட்டு, அடிக்கடி கனமழைபொழிகிறது. புயலும் தீவிரமடைகின்றது.

ஈரப்பதம் பொதுவாக கூடுதலாக இருக்கும் நேரமாக இருந்தாலும், கடந்த ஜனவரியில் மட்டும் குறுகிய காலத்தில் வடகிழக்குப் பருவமழை பெரிய அளவில் மழையைக் கொட்டித்தீர்த்தது.

அதனால் மவுன்பேட்டனின் ஜாலான் சீவியூவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு மூன்று மணிநேரம் நீடித்தது. சிங்கப்பூரில் வெள்ளம் வழக்கமாக ஒரு மணி நேரத்தில் வடிந்துவிடும்.

“பலருக்கு இங்கு வெள்ளம் ஏற்படக்கூடாது என்ற எண்ணம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆனால் பருவநிலை மாற்றத்தால் அது சாத்தியமில்லை. திடீர் வெள்ளங்கள் ஏற்படுவதை நாம் எதிர்பார்க்கத்தான் வேண்டும்.

“வெள்ளம் ஏற்படும்போது மக்கள் அதிர்ச்சி அடையும் மனநிலையை நாம் மாற்றி அவர்களின் மீள்திறனை அதிகரிக்க வேண்டும்,” என்று திரு ஓங் தெரிவித்தார். கடந்த 2023ஆம் ஆண்டில் கழகத்தின் தலைமையை ஏற்றபிறகு அவர் அளித்த முதல் ஊடக நேர்காணல் இதுவாகும்.

அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் வடிகால் பணிகளுக்கென அறிவித்த $150 மில்லியனை நினைவுகூர்ந்து, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளின் அங்கமாக சையது ஆல்வி நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதை அவர் மேற்கோள் காட்டினார். ஜாலான் புசார், ரோச்சோர் ரோடு, புக்கிட் தீமா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வடிகால் பணிகள் குறித்தும் திரு ஓங் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றத்தால் மக்களின் தண்ணீர் பயன்பாடு கூடுதலாக உள்ளதால் நியூவாட்டர் குடிநீர் தயாரிப்பு அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்