சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முறியடிக்க 2022ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட செயலியை அமெரிக்காவில் இயங்கும் பல்லுயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.
ஃபின் ஃபைண்டர் (Fin Finder) எனும் இச்செயலி, சுறா இறகுகள் சட்டவிரோதமாக விற்கப்படுவது போன்ற செயல்களை செயற்கை நுண்ணறிவின் உதவியோடு அடையாளம் காண எல்லை அமலாக்க அதிகாரிகளுக்குக் கைகொடுக்கிறது. ஆசிய கண்டத்தில் முதன்முறையாக இத்தகைய செயலி உருவாக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட இறகின் படத்தைப் பயனர்கள் இச்செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அப்படத்தைக் கொண்டு இறகின் வடிவம் போன்ற விவரங்கள் ஆராயப்பட்டு சம்பந்தப்பட்ட விலங்கு வகை அடையாளம் காணப்படும்.
சிங்கப்பூர் தேசிய பூங்காக் கழகம், மைக்ரோசாஃப்ட் சிங்கப்பூர், லாப நோக்கில்லா குழுமமான கன்சர்வேஷன் இன்டர்னேஷனல் (Conservation International) ஆகியவை இணைந்து உருவாக்கிய ஃபின் ஃபைண்டர் செயலியை வாஷிங்டனில் செயல்படும் கன்சர்வேஷன் எக்ஸ் லேப்ஸ் (Conservation X Labs) நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் வாங்கியது.
வெளியிடப்பட்டதிலிருந்து இச்செயலி 32 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 89.4 விழுக்காடு வரை துல்லியமாக காரியத்தை மேற்கொள்ள முடியும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு தேசிய பூங்காக் கழகம் பதிலளித்தது.
கன்சர்வேஷன் எக்ஸ் லேப்ஸ் ஃபின் ஃபைண்டர் செயலியை இனி இயக்கும். அதேவேளை, தாங்கள் ஃபின் ஃபைண்டரின் செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபடப்போவதாக தேசிய பூங்காக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு வர்த்தகப் பிரிவின் மூத்த இயக்குநரான டாக்டர் ஆனா வாங், “ஃபின் ஃபைண்டர் போன்ற தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்தவதன் மூலம் சுறா, ரே வகை மீன்கள் சம்பந்தப்பட்ட சட்டவிரோத வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த முடியும், பல்லுயிர்களைக் காப்பதில் சிங்கப்பூரின் ஆற்றலை மேம்படுத்த முடியும்,” என்றார். மேலும், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக முறியடிப்பில் அரசாங்க, தனியார் துறைகள் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை இச்செயலி எடுத்துக்காட்டுவதாகவும் அவர் சுட்டினார்.
எளிதில் பயன்படுத்தக்கூடிய செயலியான ஃபின் ஃபைண்டர், அடையாளம் காணும் நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளக்கூடியது. அவைதான் ஃபின் ஃபைண்டரின் சிறப்பம்சங்கள் என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

