பள்ளித் துன்புறுத்தல் சம்பவங்களைக் கையாள்வது பள்ளிகளின் பொறுப்பு மட்டுமன்று, அது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்பதை வலியுறுத்தும் வகையில் கல்வி அமைச்சு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இவற்றின் ஒரு பகுதியாக, பள்ளிகளின் மனிதவளத் தேவைகளுக்கு ஏற்ப நிதியும் வளங்களும் ஒதுக்கப்படும்.
கல்வி அமைச்சு முன்வைத்துள்ள நான்கு முக்கியத் துறைகளின்கீழ் அமைந்த ஒன்பது பரிந்துரைகளில் சில, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துதல், குடும்பம்-சமூகப் பங்காளித்துவத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
துன்புறுத்தலைச் சமாளிக்க, பகிரப்பட்ட பொறுப்பு, கூட்டு அர்ப்பணிப்பு ஆகியவை தேவை என்பதைப் பறைசாற்றும் ஒரு சமூக அளவிலான அணுகுமுறை இதில் உள்ளடங்கியுள்ளது.
வழங்கப்படும் கூடுதல் நிதியைப் பயன்படுத்திப் பள்ளிகள் இளையர்நலப் பணியாளர்கள் (youth workers), மாணவர் நலன்பேணும் அதிகாரிகள் (pastoral care officers) அல்லது பெற்றோர் தொடர்பு அதிகாரிகளை (parent liaison officers) நியமிக்கலாம். இது ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதோடு மாணவர் நல்வாழ்வு, விசாரணை நடைமுறைகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்த உதவும்.
பெற்றோர் ஈடுபாடு, மோதல் தீர்வு குறித்து மேம்பட்ட பயிற்சிகள் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும்.
“சீரமைப்பு நடைமுறையில் (restorative practice) உதவச் சமூக சேவை நிறுவனங்களின் ஈடுபாடு, உண்மை கண்டறிதலுக்குக் கூடுதல் மனிதவளம் ஆகிய வடிவங்களில் இந்த ஆதரவு அமையலாம்,” எனக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தெக் கீ தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை (ஏப்ரல் 15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளித் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடக்கும் காலகட்டத்தில், பெற்றோர்க்கு உரிய நேரத்தில் முறையான தகவல்களை வழங்கப் பள்ளிகளுக்கு வழிகாட்டப்படும். பிரச்சினைகள் வரும்போது ஆசிரியர்களும் பெற்றோரும் ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்காமல், மாணவர்களுக்கு உதவும் பங்காளிகளாக, ஒரே அணியில் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகள் பாதிக்கப்படும்போது பெற்றோர் உணர்ச்சிவசப்படுவது இயற்கை என்றாலும், கல்வி அமைச்சின்மீதும் பள்ளிகளின் விசாரணை நடைமுறைகள்மீதும் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் பள்ளிகளுக்கான சமூக, பெற்றோர் ஆதரவுக் குழுவின் (COMPASS) உறுப்பினருமான அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
“பள்ளிக்கூடங்களுக்கு விசாரணை செய்ய ஒரு குறிப்பிட்ட அவகாசம் தேவைப்படுகிறது. இதை உணராமல், பிரச்சினைகளை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, அது சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்குக் கூடுதல் மன உளைச்சலையே தரக்கூடும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் ஆகியவற்றில் பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றும் திரு அன்பரசு, 20, 23 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.
தற்போது கல்வி அமைச்சு கொண்டுவந்துள்ள புதிய பரிந்துரைகள் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரநிலையை உருவாக்குவதால், பெற்றோரின் குழப்பங்கள் பெரிதும் தீர்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
வீடுகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் அன்றாடம் உரையாடுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“பெற்றோர் வீட்டுப்பாடங்களைத் தாண்டி, பள்ளியில் நடந்த மற்ற விஷயங்கள் குறித்தும் பிள்ளைகளிடம் பேச வேண்டும். இத்தகைய ஆரோக்கியமான உறவுமுறை மூலமாகவே, அவர்கள் பள்ளியில் துன்புறுத்தலுக்கு ஆளானாலோ மற்றவர்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்தாலோ தொடக்கத்திலேயே பெற்றோரிடம் தயங்காமல் தெரிவிக்க முடியும்,” என்றார் திரு அன்பரசு.
2026 முதல் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக, மதிக்கப்படுவதாக உணரும் சூழலை உருவாக்க முடியும் என அமைச்சு நம்புகிறது.

