முன்னணி எரிபொருள் நிறுவனமான எக்சான்மோபில் பெட்ரோல் நிலையங்களை வாங்க நிறுவனங்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
$1.28 பில்லியன் மதிப்பிலான இந்தப் பெட்ரோல் நிலையங்களை வாங்க ‘ஆஸ்டர் கெமிக்கல்ஸ் அன்ட் எனர்ஜி’ நிறுவனம் முற்படுவதாக நம்பத்தகுந்த செய்திகள் கசிந்துள்ளன.
இந்தோனீசியாவின் ‘சந்த்ரா அஸ்ரி குழுமத்திற்கும்’ அனைத்துலக அளவிலான பயனீட்டு வணிக நிறுவனமான ‘கிளென்கோருக்கும்’ இடையிலான கூட்டு பங்காளித்துவ முயற்சி ‘‘ஆஸ்டர்’ நிறுவனம்.
இதற்கிடையே, எரிபொருள் நிறுவனமான ‘எக்ஸான் மொபில் கார்ப்’ நிறுவனத்தின் பெட்ரோல் நிலையங்களை வாங்க ‘ஆஸ்டர்‘ பிரத்தியேக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் விவரித்தன.
இந்நிறுவனத்தை வாங்கிட முன்வந்த இதர அனைத்துலக உலகளாவிய போட்டியாளர்களைவிட தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிறுவனம், எஸ்ஸோ பெட்ரோல் நிலையங்களை வாங்க அதிகளவு சாத்தியமுள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்விவரத்தை வெளியிட்ட தரப்பினர், தற்போது பெட்ரோல் நிலையங்கள் விற்பனைக்கான விலை, பரிவர்த்தனை, ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசீலனைகளும் பேச்சுவார்த்தைகளும் நடப்பில் உள்ளது;
அவை தனிப்பட்டவை என்பதால் இத்தகவல் அளித்தோர் பெயர் உட்பட இதர விவரங்களை வெளியிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன என்றும் மேலும் எக்ஸான் நிறுவனம் அதன் சொத்துக்களை வைத்துக்கொள்ளவும் தெரிவு செய்யலாம் என்றும் அவர்கள் மேலும் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் உள்ள அதன் 59 எஸ்ஸோ பெட்ரோல் நிலையங்களை விற்க உதவுவதற்காக எக்ஸான் ஆலோசகருடன் இணைந்து செயலாற்றி வருகிறது.
இது சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (S$1.28 பில்லியன்) மதிப்புடையதாக இருக்கலாம் என்று புளூம்பெர்க் நியூஸ் 2024 இல் செய்தி வெளியிட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே எக்ஸான் நிறுவனத்தின் அறிக்கையில் அதன் பிரதிநிதி ஒருவர், “சந்தைவெளியில் உலாவும் வதந்திகள் மற்றும் ஊகங்கள்குறித்து நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்காது; இது நடைமுறை,” என்று சொன்னார்.
மேலும் இதில் சம்பந்தப்பட்டதாக அறியப்படும் ‘ஆஸ்டர்’ நிறுவனம் இதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்க உடனடியாக ஏதும் தெரிவிக்கவில்லை.

