பாசிர் பாஞ்சாங் மூன்றாம் முனையத்தில் நவம்பர் 25ஆம் தேதி காலை, பாரந்தூக்கி மீது கொள்கலன் விழுந்ததை அடுத்து ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அந்த ஆடவர் பாரந்தூக்கியை இயக்கிக்கொண்டிருந்தபோது கொள்கலன் அதன் மீது விழுந்தது.
சம்பவம் காலை 6.40 மணியளவில் நடந்ததாக ‘பிஎஸ்ஏ சிங்கப்பூர்’ நிறுவனம் உறுதிசெய்தது.
காலை 6.55 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. பாதிக்கப்பட்ட 37 வயது ஆடவர் சுயநினைவுடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ‘பிஎஸ்ஏ சிங்கப்பூர்’ கூறியது.
சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவி வருகிறது. பாரந்தூக்கி ஒரு கொள்கலனைத் தூக்குவதும், அடுக்கிவைக்கப்பட்டுள்ள ஐந்து கொள்கலன்களை அந்தக் கொள்கலன் நகர்த்துவதும் அந்தக் காணொளியில் தெரிகிறது.
பாரந்தூக்கி பின்னால் நகரும் வேளையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் அதன் மீது விழத் தொடங்கின. மேலே இருந்த கொள்கலன், பாரந்தூக்கியை இயக்குபவர் அமர்ந்திருக்கும் பகுதிமேல் விழுந்து, பின்னர் தரையில் விழுந்தது. காணொளியின் முடிவில், பாரந்தூக்கியை இயக்குபவருக்கான பகுதியிலிருந்து ஆடவர் ஒருவர் தரையில் விழுவதும் பதிவாகியுள்ளது.
மேல்விவரங்களுக்கு மனிதவள அமைச்சைத் தொடர்பு கொண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.