நவீன வசதிகளுடன் ஜூரோங் மசேநிதி சேவை மையம்

‘சிபிஎஃப் அட் யுவர் சர்விஸ்’ திட்டம் அறிமுகம்

நவீன வசதிகளுடன் ஜூரோங் மசேநிதி சேவை மையம்

1 of 2
படம்: மசேநிதி
படம்: சாவ் பாவ்

16 May 2026 - 7:57 pm

2 mins read

புதுப்பிக்கப்பட்ட மத்திய சேம நிதிக் கழகத்தின் ஜூரோங் கிளை, முதியோர்களுக்கு உகந்த பல்வேறு நவீன வசதிகளுடன் சனிக்கிழமை (மே 16) மீண்டும் திறக்கப்பட்டது.

முதியோர் அதிகம் வாழும் சமூகமாக சிங்கப்பூர் மாறி வருவதால், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த மையம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் குறிப்பிட்டார்.

வரும் 2030ஆம் ஆண்டு வாக்கில், சிங்கப்பூர் மக்களில் நான்கில் ஒருவர் 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவருமாக இருப்பர் என்றார் அவர்.

ஜூரோங் மசேநிதி சேவை மையம் 1994ல் தொடங்கப்பட்டது. 2025 ஆகஸ்ட் முதல் தேதி புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டது.

முதியோருக்கான வசதிகள், மேம்பாடுகள்

இந்த மையத்தை அன்றாடம் 55 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 500 முதியவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அவர்களின் வசதிக்காக, 40 முதியோர் தொண்டூழியர்களின் ஆலோசனையின் பேரில் இந்த மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு சக்கர நாற்காலிகள் செல்வதற்கான அகலமான பாதைகள், நகரும் சாதனங்களை நிறுத்தும் இடங்கள், உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுயஉதவிக் கூடங்களில் எழுத்துகளின் அளவைப் பெரிதாக்கும் வசதி, கேட்கும் திறன் குறைபாடுடையவர்கள் ஊழியர்களுடன் உரையாட இருவழித் திரைகள், பூதக்கண்ணாடிகள், ஒலி பெருக்கிகள் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, வருகையாளர்களின் தேவைக்கேற்ப சேவைப் பகுதிகள் ஒதுக்கப்படும். காத்திருப்பு நேரம் குறித்த விவரங்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுவதால், மக்கள் வெளியில் சென்று வரலாம்.

காத்திருக்கும் நேரத்தில், மோசடி விழிப்புணர்வு விளையாட்டுகளை விளையாடவும், கல்வி சார்ந்த உள்ளடக்கங்களை வாசிக்கவும் புதிய இடம் உருவாக்கப்பட்டுள்ளது.

நேரில் சென்று சேவை வழங்கும் மசேநிதி கழகத்தின் ‘சிபிஎஃப் அட் யுவர் சர்விஸ்’ திட்டமும் ஜூரோங் கிளை திறப்புவிழாவில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மூத்தகுடிமக்கள், குறிப்பிட்ட முதியோர் மையங்களில் தொண்டூழியர்கள் மூலம் மசேநிதி தொடர்பான உதவிகளைப் பெறலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஜூரோங்மசேநிமத்திய சேம நிதிஅலுவலகம்திறப்புவிழாமூத்தோர்முதியோர்