சிங்கப்பூரின் எட்டாம் எம்ஆர்டி பாதையான குறுக்குத் தீவுப் பாதை (CRL) 67 கிலோமீட்டர் நீளம் கொண்டது. அது கிழக்கில் உள்ள சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஐந்துடன் மேற்கில் உள்ள கல் சர்க்கிள் பகுதியை இணைக்கும் விதமாக மூன்று கட்டங்களில் கட்டப்படவுள்ளது.
முதல் கட்டக் கட்டுமானப் பணிகள் 2030ஆம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலத்துக்கடியில் ரயில்கள் பயணம் செய்யும் அந்தப் பெருந்திட்டத்தை கட்டிமுடிக்கும் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற எஸ்எம்ஆர்டி நிறுவனம் சீனாவின் குவாங்சூ மெட்ரோ குழுமத்துடன் ஒருங்கிணைந்துள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையம் குறுக்குத் தீவுப் பாதைத் திட்டத்துக்கான கட்டுமான ஒப்பந்தங்களை இன்னும் அறிவிக்கவில்லை. அந்த ஒப்பந்தங்கள் பொதுவில் வெளியிடப்பட்டதும் எஸ்எம்ஆர்டியும் குவாங்சூ குழுமமும் அவற்றின் கூட்டு ஒப்பந்தத் திட்டத்தை முன்வைக்கவுள்ளன.
பிஷான் ரயில் பணிமனையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்எம்ஆர்டி தலைவர் சியா மூன் மிங், சீன ரயில் நிறுவனமான குவாங்சூவுக்கு நீண்ட, ஆழமான அனுபவம் உள்ளது என்று தெரிவித்தார்.
சிங்கப்பூரை விட மூன்று மடங்கு அதிகமாக, ஒன்பது மில்லியன் பயணிகளைக் கையாளும் அந்நிறுவனத்தின் அனுபவம் குடியரசின் செயல்திறனுடன் இணைந்து இந்நாட்டு மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குவாங்சூ நிறுவனத்தின்கீழ் செயல்படும் முறைப்படி, பயணம் செய்யும் சுரங்கத்தின் மேல் சுவரின் பகுதியோடு ரயில்களின் மேற்கூரைகள் தொடும்போது மின்சார இணைப்பு கிடைக்கிறது. அதில் அலுமினியத்தையும் செம்பையும் வைத்து வடிவமைக்கப்பட்ட மின்இணைப்புகளைக் கொண்ட இயந்திரங்களில் இயங்கும் ரயில் போக்குவரத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த வகை ரயில் வண்டிகளையே குறுக்குத் தீவு ரயில் பாதையில் பயன்படுத்த எஸ்எம்ஆர்டி திட்டமிடுகிறது.
தற்போதைய நிலவரப்படி எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இயக்கும் வடக்கு கிழக்குப் பாதையில் மட்டும் இந்தச் சுரங்கத்துக்கும் ரயில் வண்டிக்குமான மேற்கூரை மின்இணைப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.
அதைத் தவிர்த்து மற்ற அனைத்து எம்ஆர்டி ரயில் பாதைகளிலும் வண்டிகள் தண்டவாளங்களில் செல்லும்போது, கீழே தனியே இயங்கும் ஒரு மின்கம்பியுடன் அவை இணைக்கப்பட்டு மின்சக்தியைப் பெறுகின்றன.
இதுவரை சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட நிலத்தடி ரயில் பாதைகளில் ஆக நீளமான குறுக்குத் தீவு பாதையில் 27 ரயில் நிலையங்கள் செயல்படும்.


