தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக அமைந்த தீபாவளி ஒளியூட்டு 2025

3 mins read
6fadee1c-52fb-42f9-b6c7-2c83c6692422
ஹேஸ்டிங்ஸ் ரோட்டில் தொடங்கி பெர்ச் ரோட்டில் முடிவடைந்த ஊர்வலப் பாதையில் அதிபர் தர்மனும் மற்ற முக்கிய விருந்தினர்களும் மயில் உருவில் அமைக்கப்பட்ட சிறப்பு மிதவையில் பவனி வந்தனர். - படம்: த.கவி
multi-img1 of 4

ஒவ்வொரு பண்டிகையையும் பன்முகக் கலாசாரக் கொண்டாட்டமாகக் கருதி, ஒன்றுபட்டுக் கொண்டாடுவதுதான் சிங்கப்பூரின் வழிமுறை என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

‘லிட்டில் இந்தியா ஆர்கேட்’முன் அமைக்கப்பட்ட ‘கிராண்ட் ஸ்டாண்ட்’ மேடையில், சனிக்கிழமை (செப்டம்பர் 6) இரவு நடைபெற்ற தீபாவளி ஒளியூட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதைத் தெரிவித்தார்.

பலதரபட்ட இந்தியச் சமூகத்தினர் மட்டுமல்லாமல் பல்லினச் சமூகத்தினரும் இணைந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

விளக்குகளை ஏற்றும் தருணத்தில், ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் பரிவு காட்டி, ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என அதிபர் வலியுறுத்தினார்.

Watch on YouTube

மேலும், “ஒவ்வொரு தனிநபரிலும் உள்ள ஒளியை அடையாளம் கண்டு, பின்தங்கியவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருந்து, அனைவரையும் ஒன்றிணைத்து உயர்த்துவதே தீபாவளி உணர்வு,” என்றார் அவர்.

‘லி‌‌‌ஷா’ எனப்படும் லி‌‌‌ட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழா, சிறப்பு விருந்தினர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனையடுத்து, வரும் நவம்பர் 9ஆம் தேதிவரை மொத்தம் 64 நாள்கள், லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

இம்முறை, சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, 600,000 ‘எல்இடி’ மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. லிட்டில் இந்தியா கடைத்தொகுதியிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு 42 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டங்களின் கருப்பொருள் ‘ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்’ என்பதாகும்.

ஒளியூட்டு விழாவில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன், கலாசார, சமூக, இளையர் துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், தேசிய வளர்ச்சி மற்றும் வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா, வெளிநாட்டுத் தூதர்கள் உட்பட பலரும் பங்­கேற்­றுச் சிறப்­பித்­தனர்.

தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பங்களித்த ஏறக்குறைய 20 சமூக அமைப்புகளுக்கு அதிபர் தர்மன் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அதேநேரம், இந்து அறக்கட்டளை வாரியம் உட்பட பல்வேறு அமைப்புகளும் கோவில்களும் ‘அதிபர் சவால்’ இயக்கத்திற்காக $100,000 திரட்டி, அதற்கான காசோலையை அதிபரிடம் வழங்கின.

இவ்வாண்டின் கொண்டாட்டங்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு வண்ணமயமான ‘உற்சவம்’ சாலை அணிவகுப்பு மீண்டும் இடம்பெற்றது. முதன்முறையாக சிராங்கூன் சாலை முழுவதும் இதற்காக மூடப்பட்டது.

இரவு ஏறத்தாழ 7.30 மணியளவில் தொடங்கிய இந்த அணிவகுப்பில் மொத்தம் 25 பல்லின, சமூக, கலை அமைப்புகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குறிப்பிடத்தக்க வகையில், ஸ்ரீ நாராயண மிஷன் குழுவில் 63 முதல் 94 வயதுடைய 23 முதியவர்கள் பங்கேற்றனர்.

‘அப்சரஸ் ஆர்ட்ஸ்’ கலை நிறுவனத்தின் குழுவில் ஆக இளம் பங்கேற்பாளர்களாக 4 வயதுச் சிறுவர்களும் நடனமாடினர்.

மேலும், இவ்வாண்டு, ‘முன்னோக்கிச் செல்வோம், ஒன்றாக - சிண்டாவுடன் ஒரு பயணம்’ என்ற கருப்பொருளையொட்டி சிண்டாவின் இளம் கலைஞர்களும் பயனாளர்களும் தன்னார்வலர்களும் அணிவகுப்பில் ஒரு குழுவாகக் கலந்துகொண்டனர்.

ஆண்டுதோறும் இடம்பெறும் சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு ஓர் அதிகாரபூர்வமான தொடக்கமாக இது அமைந்தது.

அணிவகுப்பு, ஹேஸ்டிங்ஸ் ரோட்டில் தொடங்கி பெர்ச் ரோட்டில் முடிவடைந்தது. இரவு 8.15 மணியளவில் அதிபர் தர்மனும் மற்ற முக்கிய விருந்தினர்களும் மயில் உருவில் அமைக்கப்பட்ட சிறப்பு மிதவையில் ஏறி, மேற்கூறிய பாதையில் ஊர்வலம் சென்றனர்.

தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நவம்­பர் 11ஆம் தேதிவரை பல்­வேறு நிகழ்ச்­சிகள், நடவடிக்கைகளுக்கு லிஷா இதர பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்த மேல்விவ­ரங்­களை https://www.deepavalisg.com/ என்ற இணையப் பக்­கத்­தில் தெரிந்து­கொள்­ள­லாம்.

குறிப்புச் சொற்கள்