குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவளித்து வரும் சமூகநலன் சார்ந்த உதவிகளின் நிலவரம் தொடர்பிலான அறிக்கையை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் (2019-2023) கொம்கேர் (ComCare) சமூகநல நிதி, மற்றும் கொம்லிங்க்+ (ComLink+) உதவிபெற்ற குடும்பங்களின் சூழல் பற்றிய அறிக்கையை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) வெளியிட்ட அமைச்சு, சமூக ஆதரவு அமைப்பில் சிங்கப்பூரின் அணுகுமுறை, அதில் நிலவும் முக்கிய போக்குகள் குறித்த தரவுகளையும் பகிர்ந்தது.
அறிக்கை கூறும் தகவல்கள்
கொம்கேர் குறுகியகால - நடுத்தர கால உதவித் திட்டம் வாயிலாக ஆதரவுபெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2019ல் அத்தகைய உதவி நாடிய குடும்பங்களின் எண்ணிக்கை 4,175. இது, 2023ல் 3,479ஆகச் சரிந்ததை அறிக்கை சுட்டியது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், உதவிபெற்ற குடும்பங்களின் பயனாளிக்கு வழங்கப்படும் சராசரி குறுகிய, நடுத்தர கால மாதாந்தர ரொக்க உதவி அதிகரித்தது. 2019ல் $300ஆக இருந்த அந்தத் தொகை, 2023ல் $370ஆக அதிகரித்தது எனவும் அமைச்சின் அறிக்கை விவரித்தது.
“இது, கொம்கேர் உதவிகள் போதுமானதாக இருப்பதை உறுதிசெய்ய அமைச்சு மேற்கொண்டுவரும் முறையான மறுஆய்வை வெளிப்படுத்துகிறது,” என்று அறிக்கை தெரிவித்தது.
மேலும், சமூகநலன் சார்ந்த குறுகிய கால, நடுத்தர கால உதவிகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, 36 மாதங்களுக்குள்ளாக மீண்டும் அவற்றை நாடும் குடும்பங்களின் விகிதமும் குறைந்துள்ளது.
இந்தக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சீரிய முறையில் ஆதரிப்பதற்கான வழிகளை அமைச்சு கண்டறிகிறது. பிள்ளைகளைக் கொண்ட இந்தக் குடும்பங்களை ஆதரிப்பதற்கான வழிகளில் கொம்லிங்க்+ ஒன்று.
இதன் தொடர்பில் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதை உறுதிசெய்யும் அதேவேளையில், முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டம் வாயிலாக, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, குடும்பங்கள் தங்கள் பேரார்வங்களை அடையும் வகையில் கொம்லிங்க்பிளஸ் உதவித்திட்டம் வாயிலாக அவர்களை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாக அறிக்கை விளக்கியது.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பில் கருத்துரைத்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, நிலைத்தன்மை, தற்சார்பு, சமூக முன்னேற்றம் ஆகிய ஆதரவுகளைக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அளிப்பது கூட்டுப் பொறுப்பு என்றார்.
“அமைச்சின் அணுகுமுறை சமூக உதவி நல்குவதிலிருந்து சமூக ஆற்றலை அடைவதை நோக்கிப் பயணிக்கிறது. இங்குத் தனிநபரின் முயற்சிகள், அரசாங்கம், குடும்பம், சமூகத்தின் ஆதரவுடன் நிறைவு செய்யப்படுகின்றன.
“இந்த அறிக்கை, குறைந்த வருமானக் குடும்பங்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து வலுப்படுத்துவது, நிலைத்தன்மை, பிறரைச் சார்ந்திருக்காமல் தற்சார்பு அடைதல், சமூக முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கி அவர்களுடன் இணைந்து பயணிப்பது பற்றிய குறிப்பை வழங்குகிறது.
“இம்முயற்சியில் கூடுதல் சமூக உறுப்பினர்களும் பங்காளித்துவ நிறுவனங்களும் இணையுமாறு ஊக்குவிக்கிறேன்,” என்று கூறினார்.