இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க சீனாவுக்கு செல்கிறார் திரு கான் கிம் யோங்.
துணைப் பிரதமராகத் திரு. கானின் முதல் சீனப் பயணம் இது. இத்தகவலை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று வெளியிட்டது பிரதமர் அலுவலகம்.
ஐந்து நாள் அதிகாரத்துவப் பயணமாகச் சீனா செல்லும் திரு கான், பெய்ஜிங்கில் நடைபெறும் இரண்டாம் உலகப் போர் தொடர்பிலான நினைவு நிகழ்ச்சிகள், மரியாதை அணிவகுப்பு உள்ளிட்டவற்றில் கலந்துகொள்கிறார்.
வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், சீன அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பலரை சந்திக்கவிருக்கிறார்.
அப்போது வர்த்தகம், முதலீடு சார்ந்த துறைகளில் வட்டார மற்றும் அனைத்துலக அளவில் இருநாட்டு உறவுகளையும் இன்னும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாகப் பல முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் திரு கான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.