சிங்கப்பூரில் பதிவு ரத்தான கார்கள் மலேசியாவில் மலிவாக விற்பனை

சிங்கப்பூரில் பதிவு ரத்தான கார்கள் மலேசியாவில் மலிவாக விற்பனை

படம்: Facebook/singapore Scrap Car

25 Nov 2026 - 7:00 pm

2 mins read

ஜோகூர்பாரு: சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்டுப் பதிவு ரத்து செய்யப்பட்டக் கார்கள் மலேசியாவில் சட்ட விரோதமாக மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவதாக இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் விவரங்களை சிஎன்ஏ ஊடகம் புதன்கிழமை (நவம்பர் 25) வெளியிட்டுள்ளது. உதாரணமாக பிஎம்டபிள்யு சொகுசு வாகனம் ஜோகூரின் பயன்படுத்தப்பட்ட வாகனச் சந்தையில் மலேசிய ரிங்கிட் 25,000க்கு (S$6, 000) விற்கப்படுவதாக இணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதைப்போல சிங்கப்பூரில் பதிவு ரத்தாகிய பல வாகனங்கள் அவ்வாறு விளம்பரங்களில் பயன்படுகின்றன.

சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், டெலிகிராம், வீசாட் போன்றவற்றில் டோயோட்டா, ஹொன்டா, பிஎம்டபிள்யு, மெர்சடிஸ் பென்ஸ், லேன்ட் ரோவர் போன்ற பல புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான கார்கள் விற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்படுகிறது.

அவற்றில் பல 10 முதல் 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டவை. தொடக்கவிலை மலேசிய ரிங்கிட் 5,000 முதல் 100,000 வரை இருக்கலாம்.

கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 23) மட்டும் 10 ஆண்டுகள் பழமையான டோயோட்டா வெல்ஃபையர் கார் மலேசிய ரிங்கிட் 33,000க்கும், 15 ஆண்டுகளான மெர்சடிஸ் பென்ஸ் 10,000 மலேசிய ரிங்கிட்டுக்கும், 15 ஆண்டுகளாக இயங்கிய மினி கூப்பர் மலேசிய ரிங்கிட் 5,500க்கும் ஒரு பட்டியலில் விற்பனைக்கு விடப்பட்டன.

சில விற்பனையாளர்கள் அதுபோன்ற கார்கள் அவற்றின் உபரி பாகங்களுக்காக வாங்கப்படுவதாகக் கூறுகின்றனர். ஆயினும் மலேசிய சாலைகளில் அவற்றை பயன்படுத்துவது ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏனெனில் அவற்றுக்குக் காப்புறுதிகள் இல்லாததோடு, சாலைகளில் எது நடந்தாலும் உரிமையாளர்களே அவற்றுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள நேரிடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இரு நாடுகளிலும் இது சட்டத்துக்கு எதிரான ஒன்றாக இருந்தாலும் சிலர் அதனை பொருட்படுத்தாது செயல்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்