மூன்றாம் தரப்பு நாடுகள் ஈடுபட்டுள்ள அனைத்துலக விவகாரங்கள் தொடர்பில் உள்நாட்டு எதிர்வினையைத் தூண்ட முற்படும் வெளிநாட்டுத் தூதரகங்களின் முயற்சிகளை சிங்கப்பூர் அரசாங்கம் நிராகரிப்பதாகத் தெரிவித்தது. அத்தகைய சிக்கலான விவகாரங்களுக்கு அரசதந்திர முறைப்படி தீர்வுகாண்பதே சிறந்த அணுகுமுறை என்று அது குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் உள்ள அமெரிக்க, சீனத் தூதரகங்கள், தென் சீனக் கடல் பற்றிய காணொளியையும் கருத்துகளையும் பரிமாறிக்கொண்டதை அடுத்து புதன்கிழமை (மே 21) வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
தென் சீனக் கடல் எல்லை குறித்த பூசலை கழக வீடுகளின் பொது வெளிகளில் நடைபெறும் சச்சரவுகளுடன் ஒப்பிட்டு சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மே 20ஆம் தேதி காணொளியை பதிவேற்றியது.
ஒன்றரை நிமிட அந்தக் காணொளி கழக புளோக்குகளின் வெளிப்புற காட்சிகளுடன் தொடங்கி நடைப்பாதைகளிலும் பொது வெளிகளிலும் அலங்கோலமாக வைக்கப்பட்ட பொருள்களின் படத்தை நோக்கி நகர்கிறது.
“வீட்டுக்கு ஒரு நாள் வரும்போது இதைப் பார்ப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்,” என்று சிங்கப்பூர் பாணியில் ஒரு குரல் ஆங்கிலத்தில் சொல்கிறது.
“உங்கள் வீட்டுக்கு முன் இருக்கும் இடம் தம்முடையது என்று அண்டைவீட்டார் ஒருவர் முடிவு செய்துவிட்டார். உங்கள் வீட்டு வாசலைப் பொருள்களை வைத்து தடுக்கிறார். இது உங்களுக்கு எதையாகிலும் நினைவுபடுத்துகிறதா,” என்று அந்தக் குரல் கேட்கிறது.
அதையடுத்து தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்த்து பிலிப்பீன்ஸும் வியட்னாமும் ஆர்ப்பாட்டம் செய்வதைக் காணொளியில் காண முடிகிறது.
ஒரு நாள் கழித்து, மே 21ஆம் தேதி, சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகம் அமெரிக்கத் தூதரகத்தின் காணொளிக்குப் பதில் காணொளியைப் பதிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதில், அனைத்துலக விவகாரம் குறித்து பேசுவதற்கு ஆகக் குறைவான தகுதி கொண்ட நாடு அமெரிக்கா என்று சீனத் தூதரகம் குறிப்பிட்டது.

