மின்னிலக்கமயமான உலகில் வாழ்ந்துவரும் நாம் தொழில்நுட்பத்தின் சாதகத்தைப் பெற்றுக்கொள்ளும் வேளையில், அதன் பாதகத்தில் இருந்தும் சிறார்களைக் காக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர்
பிள்ளைகளை அமைதிப்படுத்தும் பொறுப்பைக் கைப்பேசியிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
பிரதமராகப் பொறுப்பேற்றபின் இரண்டாவது முறையாகத் தேசிய தினப் பேரணி உரையாற்றிய திரு லாரன்ஸ் வோங், பேரளவாக வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் தமது ஆங்கில உரையின்போது குறிப்பிட்டார்.
‘‘பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இணையத்திலும் கணினித் திரைகளிலும் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று கவலைப்படுகிறார்கள். இது புதியது அல்ல. தற்போதைய உலகில் அனைவரும் எல்லா நேரமும் இணையம்வழி தொடர்பில் இருக்கின்றனர்.
இந்தச் சூழலில் இணையப் பயன்பாடு தொடர்பில் இவர்களுக்கான எல்லை வரம்புகளை நியமிப்பதும், தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதும் கூடப் பெற்றோருக்குக் கடினம்,’’ என்று குறிப்பிட்ட பிரதமர் தொடர்ந்து பேசினார்.
தொழில்நுட்பத்தின் பயன்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இளையோரை ஆற்றல்மிக்கவர்களாக ஆயத்தப்படுத்தும் வேளையில், அதில் உள்ள தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாக்க சரியான சமநிலையை வகுப்பதும் அவசியம் என்று தெரிவித்தார் பிரதமர்.
இதனைப் பிள்ளைகளின் இளம்பருவத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்று சுட்டிய திரு வோங், கைக்குழந்தைகள், பாலர்களைப் பொறுத்தவரை ‘திரை நேரம்’ என்று ஒன்று அறவே இல்லை என்றும் சொன்னார்.
பாலர் பள்ளி பிள்ளைகளுக்கான கணினி திரை நேரம் குறித்து அவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் உரையின்போது கேட்டுக்கொண்டார் பிரதமர்.
தொடர்புடைய செய்திகள்
மெய்நிகர் உலகில் மூழ்கிவிடாமல் யதார்த்தமான உலகில் பிள்ளைகள் வளர்ச்சி அடைய, கற்க, நம்பிக்கையுடன் நடமாட, அவர்களைப் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்று சொன்ன திரு வோங், பெற்றோர்களின் இந்தப் பயணத்தில் அவர்களுக்கு கூடுதல் ஆதரவை அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்.
சிறார்களுக்கான இணையம், சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் கடும் கட்டுப்பாடு விதிப்பது குறித்து சில நாடுகள் பரிசீலித்து வருவதைச் சுட்டிய திரு வோங், இதன் தொடர்பில் மற்ற நாடுகளின் அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, எந்த முறை சிங்கப்பூருக்குப் பயனளிக்கும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சிறார்களுக்கான இணையப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிய திரு வோங், மின்னிலக்க உலகைத் துணிவுடன் எதிர்கொள்ள மின்னிலக்க மீள்திறனையும் அவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாளும் பயனர்களாகச் சிறார்கள் உருவாக ஆசிரியர்கள் உதவுகின்றனர் என்பதையும் உரையின்போது சுட்டிய திரு வோங், ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவைப் புத்தாக்கமிக்க வகையில் கைக்கொண்டு பிள்ளைகளின் கற்றல் பயணத்தை மேம்படுத்துவதாகவும் சொன்னார்.
தேர்வுக்கு அல்ல, மாணவர்களை வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துகிறோம்
அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிள்ளைகளை ஆயத்தப்படுத்த வேண்டும் என்ற முனைப்பு பெற்றோருக்கு உண்டு என்பதையும் தமது உரையின்போது மேற்கோள் காட்டிய பிரதமர் வோங், மெய்யறிவு என்ன என்பதையும் விளக்கினார்.
“அறிவு என்பது அதிக அளவு உள்ளடக்கங்களைச் சேமித்துக்கொள்வது அல்ல என்றும் சிந்திக்கவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் வாழ்நாள் முழுதும் நீடித்த கற்றல் பெறும்திறனை வளர்ப்பதே ஆகும்,” என்று தெரிவித்தார் பிரதமர்.
செயற்கை நுண்ணறிவின் செயல்பாடு குறித்தும் அவற்றிலும் பிள்ளைகள் ஆற்றல்மிக்கவர்களாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்தியபோதும், “நற்பண்புகள், விழுமியங்கள், பரிவு, நோக்கமுடைய வாழ்வு” உள்ளிட்ட மனிதப் பண்புகள் இக்காலத்திலும் மிகவும் குறிப்பிடத்தக்கவை என்று கோடிட்டார் திரு வோங்.
இதனைக் கருத்தில் கொண்டே பண்புநலன், குடிமையியல் சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக விளக்கிய பிரதமர் வோங், தேர்வுக்கு அல்ல , மாணவர்களை வாழ்வதற்கு ஆயத்தப்படுத்துகிறோம் என்று குறிப்பிட்டார்