பிரதமர் லாரன்ஸ் வோங், அடுத்த பொதுத் தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
“தேர்தலை எப்போது நடத்தவேண்டும் என்பது குறித்து நான் இன்னும் முடிவுசெய்யவில்லை. நாங்கள் அதற்கான செயல்முறைகளைத் தொடங்கும்போது மக்கள் தெரிந்துகொள்வார்கள்,” என்றார் திரு வோங்.
வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டம் தேர்தல் வரவுசெலவுத் திட்டமாக இருக்குமா என்பதற்குப் பதிலளித்த பிரதமர், அது தற்போதைய அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டமாக இருக்கக்கூடும் என்று கூறினார்.
“காரணம், வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்பே தேர்தல் நடத்தப்படலாம். ஆனால், தேர்தல் அதற்குப் பின்பு நடப்பது சாத்தியமாக இருக்குமானால், இந்த அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டமாக அது இருக்கக்கூடும்,” என்று பிரதமர் வோங் மேலும் கூறினார்.
தேர்தலுக்குத் தாமும் தமது குழுவும் தயாராகி வருவதாகச் சொன்ன அவர், 2025ஆம் ஆண்டு நவம்பருக்குள் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் கூறினார்.
தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேடும் பணியில் துடிப்புடன் ஈடுபட்டு வருவதாகச் சொன்ன திரு வோங், நேரம் வரும்போது சிங்கப்பூரர்களுக்குச் சிறந்த வேட்பாளர்களை அறிமுகப்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.

