முற்றிய நோய்களால் பாதிக்கப்பட்டோர்க்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆரம்பக்கட்டத்திலேயே ஒருங்கிணைக்கப்பட்ட அந்திமகாலப் பராமரிப்பை வழங்க செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை ‘ஓப்பல்’ எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த வெளிநோயாளிச் சேவைத் திட்டம், செயின்ட் லூக்ஸ் மருத்துவமனையில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அந்திமகாலப் பராமரிப்புத் துறையை மேம்படுத்துவதில் முன்னோடியாகத் திகழும் லியென் அறநிறுவனம், இத்திட்டத்திற்காக $2.2 மில்லியன் நிதியுதவி அளித்துள்ளது.
பொதுவாக மருத்துவமனைகள், அந்திமகாலப் பராமரிப்பு நிலையங்கள் அல்லது வீடுகளில் மட்டுமே வழங்கப்படும் அந்திமகாலப் பராமரிப்பை இத்திட்டம் ஆரம்பநிலைச் சுகாதாரக் கழகங்களுக்குக் கொண்டுசெல்கிறது.
புக்கிட் பாத்தோக்கில் உள்ள செயின்ட் லூக்ஸ் சமூக மருத்துவமனையில் இயங்கும் சமூக மருந்தகத்தின் மூலம் இதுவரை 90க்கும் மேற்பட்ட நோயாளிகள் இத்திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை தனது அந்திமகாலப் பராமரிப்பு நிலையம், அந்திமகாலப் பராமரிப்பு படுக்கைப் பிரிவுகள், இல்லம் சார்ந்த அந்திமகாலப் பராமரிப்புச் சேவைகள் மூலம் ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.
இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய மருத்துவமனையின் தலைமை நிர்வாகி டான் பூன் யோவ், “அந்திமகாலப் பராமரிப்புக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், நிபுணத்துவச் சேவைகளையும் அந்திமகாலப் பராமரிப்பு நிலையங்களையும் மட்டுமே நம்பியிருக்க முடியாது.
“நோயாளிகளின் நிலைமை மேலும் சிக்கலாவதற்கு முன்பே, அவர்களுக்குப் பொதுவான அந்திமகாலப் பராமரிப்பை வழங்க ஆரம்பநிலைச் சுகாதாரப் பராமரிப்புக் குழுக்களைத் தயார்ப்படுத்த வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், அடுத்த நான்கு ஆண்டுகளில் பொது மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து 1,200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவளிக்க ‘ஓப்பல்’ குழு இலக்கு வைத்துள்ளதாக திரு டான் கூறினார்.
