விரைவாக மூப்படைந்து வரும் சமூகத்தின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், சிங்கப்பூரில் சமூகச் சுகாதார நிலையங்களின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் கட்டமைப்பு (என்யுஎச்எஸ்), தேசிய சுகாதாரக் கட்டமைப்பு (என்எச்ஜி ஹெல்த்), சிங்ஹெல்த் ஆகிய சிங்கப்பூரின் மூன்று பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகளும் இந்த ஆண்டில் இதுவரை 35 நிலையங்களின் சேவைகளை மேம்படுத்தியுள்ளன. வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் மேலும் பல நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன.
சிங்கப்பூரில் 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய குடிமக்களின் விகிதம் 21.4 விழுக்காட்டை எட்டி, நாடு ‘மூப்படைந்த சமூகமாக’ மாறியுள்ள நிலையில், வீடுகளுக்கு அருகிலேயே தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார ஆலோசனை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நீடித்த நோய்களுக்கான சேவைகளை வழங்குவது இந்நிலையங்களின் நோக்கம்.
பராமரிப்பாளருக்கான ஆதரவு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகான தொடர் கண்காணிப்பு ஆகியவை இவற்றின் மேம்படுத்தப்பட்ட சேவைகளில் அடங்கும்.
துடிப்புடன் மூப்படைதல் மையங்கள் (ஏஏசி), வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் செயல்படும் இந்நிலையங்கள், தற்போது வாரம் ஒருமுறை இயங்குகின்றன. இவை முன்னர் மாதம் ஒருமுறை செயல்பட்டன.
வடக்கு, மத்திய பகுதிகளை நிர்வகிக்கும் என்எச்ஜி ஹெல்த், உட்லண்ட்ஸ், செம்பவாங், ஈசூன், தோ பாயோ ஆகிய நான்கு நகரங்களில் உள்ள 27 நிலையங்களை மேம்படுத்தியுள்ளது.
சிங்ஹெல்த் கட்டமைப்பு, பிடோக், தியோங் பாரு-ரெட்ஹில் ஆகிய பகுதிகளில் ஐந்து மேம்படுத்தப்பட்ட நிலையங்களை அமைத்துள்ளது. அங்கு தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனை, மருந்துகளைப் பெறும் வசதி, செவிலியர் ஆலோசனைகளுடன் தற்போது, உடல் எடை மேலாண்மை, புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான ஆலோசனை, சமூக மருந்தகச் சேவை, ஊட்டச்சத்து ஆலோசனைகளையும் வழங்குகின்றன.
இதுவரை 58,800க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் சிங்ஹெல்த் நிலையங்கள் வழி பயனடைந்துள்ளனர்.
என்யுஎச்எஸ் கட்டமைப்பு புக்கிட் பாஞ்சாங்கில் மூன்று நிலையங்களை மேம்படுத்தியுள்ளதுடன், முதியோருக்கான தனிப்பட்ட பராமரிப்புத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2027 மார்ச் இறுதிக்குள் மேலும் நான்கு சமூகச் சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று அது குறிப்பிட்டது.
மருத்துவமனைகளுக்கு முதியவர்கள் செல்வதைக் குறைத்து, சமூக மட்டத்திலேயே முன்கூட்டியே நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதே இதன் நோக்கம் என்று சுகாதாரப் பராமரிப்புத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர்.
