வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி முதல் ஈஸிலிங்க் செயலி செயல்பாட்டில் இருக்காது.
அந்தச் செயலியின் அம்சங்கள் சிம்பிளிகோ (SimplyGo) செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஈஸிலிங்க் செயலியைப் பயன்படுத்துவோர் சிம்பிளிகோ செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்களின் ஈஸிலிங்க் கணக்குத் தகவல்களைக் கொண்டு உள்ளே சென்று இரு செயலிகளின் கணக்கு விவரங்களையும் இணைக்கவேண்டும். செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) மின்னஞ்சல்வழி சிம்பிளிகோ இதுகுறித்துப் பயனர்களுக்குத் தெரியப்படுத்தியது. இது, பயனர்களின் கணக்குகளும் அட்டைகளும் சிம்பிளிகோ செயலிக்கு மாற வகைசெய்யும்.
தங்களின் ஈஸிலிங்க் கணக்குகளை சிம்பிளிகோ செயலிக்கு மாற்றிக்கொள்ளாதோரின் கணக்குகள் அழிக்கப்படாது. ஆனால், அவ்வாறு செய்யும் வரை சம்பந்தப்பட்டோரின் ஈஸிலிங்க் அட்டைகளைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும்.
இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து ஈஸிலிங்க் செயலி கட்டங்கட்டமாக செயல்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக சிம்பிளிகோ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, சென்ற அண்டு செப்டம்பர் மாதம் முதல் ஈஸிலிங்க் செயலியின் எல்லா அம்சங்களும் சிம்பிளிகோ செயலியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட எல்லா சேவைகளையும் ஒரே தளத்தில் பயன்படுத்த வகைசெய்வதே இதன் இலக்கு.

