எதிர்கால ஐந்து நாட்டு தற்காப்புப் பயிற்சிகளில் எஃப் 35 போர் விமானங்கள், ஆளில்லா வானூர்திகள்

எதிர்கால ஐந்து நாட்டு தற்காப்புப் பயிற்சிகளில் எஃப் 35 போர் விமானங்கள், ஆளில்லா வானூர்திகள்

2 mins read
0ad36c5f-2ead-429c-917c-a2cb46e2be14
சிங்கப்பூரில் ஷங்ரி-லா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (மே 31) நடந்த 12வது ஐந்து நாடுகள் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பில் நியூசிலாந்து தற்காப்பு அமைச்சர் ஜூடித் காலின்ஸ், மலேசிய தற்காப்பு அமைச்சர் முஹமட் காலிட் நோர்டின், சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், ஆஸ்திரேலியத் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ், இங்கிலாந்து தலைமை இயக்குநர் (தற்காப்புக் கொள்கை) பால் வியாட் ஆகியோர். - படம்: இபிஏ

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த எஃப் 35 போர் விமானங்கள். நியூசிலாந்து நாட்டிலிருந்து பி-8 பொசெய்டான் கடல்சார் கண்காணிப்பு விமானம். இங்கிலாந்தின் விமானம் தாங்கிக் கப்பல்கள், ஆளில்லா தற்காப்பு அமைப்புகள்.

இவையெல்லாம், சிங்கப்பூர் அங்கம் வகிக்கும் ஐந்து நாட்டுத் தற்காப்புத் திட்டத்தின் (எஃப்பிடிஏ) கீழ் எதிர்காலத்தில் நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சிகளில் இடம்பெறவுள்ள அடுத்த தலைமுறை ஆற்றல்கள்.

அந்தத் திட்டத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய அந்த நாடுகளின் தற்காப்புப் பிரதிநிதிகள் 12வது எஃப்பிடிஏ தற்காப்பு அமைச்சர் நிலைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 31) சந்தித்தபோது, இந்த யோசனைகள் விவாதிக்கப்பட்டன, பயிற்சிகளில் அதி திறன் மிக்க போர்க் கருவிகளை அதிகம் பயன்படுத்த கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தச் சந்திப்பை, சிங்கப்பூரும் மலேசியாவும் மாறி மாறி நடத்தி வருகின்றன. வெள்ளிக்கிழமை (மே 31) தொடங்கிய ஷங்ரிலா உச்சநிலை மாநாட்டுக்கு இடையே இம்முறை இச்சந்திப்பு நடைபெறுகிறது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெறும் ‘பெர்சாமா லிமா’ பயிற்சியில் எஃப் 35 கூட்டுத் தாக்குதல் போர் விமானங்களை ஈடுபடுத்தி ஆஸ்திரேலியா பங்களிக்கும் என்று கூறினார்.

எஃப்பிடிஏ நாடுகள் இணைந்து செயல்படும் திறனை வளர்ப்பதையும், அவற்றின் வான், ஆகாயம், தரைப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட வழக்கமான பயிற்சிகளில் இந்த பயிற்சியும் ஒன்றாகும்.

பயிற்சியின் ஒரு பகுதியாக பி-8 பொசெய்டான் முதல் முறையாக சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் என்று நியூசிலாந்து தற்காப்பு அமைச்சர் ஜூடித் காலின்ஸ் தெரிவித்தார். பி-8 விமானம் அமெரிக்காவின் முதன்மையான, நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் கண்காணிப்பு விமானமாகும், இது சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் கண்காணிப்புக்கு எதிராக இந்த வட்டாரத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

தென்சீனக் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் இந்தோனீசியாவிலுள்ள முக்கிய நீர்மூழ்கிக் கப்பல் பாதைக்கு அருகில் சிங்கப்பூர் உள்ளது.

சிங்கப்பூரிலிருந்து பிரிட்டிஷ் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டபோது, சிங்கப்பூர், மலேசியாவின் வெளிப்புறத் தற்காப்பை உறுதிப்படுத்துவதற்காக முதன்முதலில் 1971ஆம் ஆண்டில் எஃப்பிடிஏ உருவாக்கப்பட்டது,

வட்டார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், ராணுவ உறவுகளை வலுப்படுத்துவதிலும் “ஆக்கபூர்வமான, அமைதியான பாதுகாப்பு ஏற்பாடாக” இது முக்கியப் பங்கு வகிப்பதாக எஃப்பிடிஏ நாடுகள் கருதுவதால், இது 53 ஆண்டுகளாக தொடரும், ஆக்கம் நிறைந்த அமைப்பாக விளங்குகிறது.

எதிர்கால நோக்கில், எஃப்பிடிஏ “மரபுசாரா துறைகளிலும்” திறன்களை உருவாக்க முயற்சிக்கும் என்று காலையில் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறினார்.

ஏனெனில், எதிர்கால பயிற்சிகள் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்களைக் கொண்டிருக்கும் என்று டாக்டர் இங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்