ஆசியானில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேலைகளில் 1%க்கும் குறைவானோரே உள்ளனர்: அறிக்கை

ஆசியானில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேலைகளில் 1%க்கும் குறைவானோரே உள்ளனர்: அறிக்கை

படம்: த செஞ்சுரி ஃபவுண்டே‌ஷன்

10 Nov 2026 - 5:35 am

2 mins read

ஆசியான் வட்டாரத்தில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான ஊழியர்கள்தான் நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் வேலைகளில் இருப்பதாகப் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கை சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியான் வட்டார நாடுகளை ஆராய்ந்தது. வேலைவாய்ப்புக் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள, ‘ஆசியான் நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் வேலைகள் அறிக்கை’ (ASEAN Green Jobs Report) பெரும்பாலும் தொழில்முறை சமூக வலைத்தளமான லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தின் தரவுகளையே பயன்படுத்தியது

சிங்கப்பூரைத் தவிர இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளிலும் நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் வேலைகள், திறன்கள் ஆகியவற்றை அறிக்கை ஆராய்ந்தது. கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி சிங்கப்பூரில் ஆசியான் ஊழியர் புள்ளிவிவர வல்லுநர் கட்டமைப்பு (ஏஎல்எஸ்என்) தொடங்கப்பட்டபோது அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் வேலைகளுக்கு சீராக, அனைவரையும் உள்ளடக்கும் முறையில் மாறுவதற்கான ஆசியான் கட்டமைப்பு, செயற்திட்டத்தின்படி (ASEAN Framework and Action Plan for a Just and Inclusive Transition to Green Jobs) நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் வேலைகள் என்பவை, சுற்றுச்சூழலை மேம்படுத்தும், தரமான வேலைகளைக் குறிக்கும். ஆசியான் நாடுகளில் நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் வேலைகளில் சிங்கப்பூர்தான் ஆகக்குறைந்த பங்கை வகிக்கிறது. சிங்கப்பூரில் வேளாண் துறை இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேவேளை, கட்டுமானம், உற்பத்தி போன்ற துறைகளிலும் நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் வேலைகள் உள்ளன.

கட்டுமான, பொதுப் பயனீட்டுத் துறைகள்

கடந்த 2024ஆம் ஆண்டு லிங்க்ட்டின்னில் இடம்பெற்ற வேலைவாய்ப்பு விளம்பரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவின்படி, சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணிபுரியும் திறனாளர்களில் 25.2 விழுக்காட்டினர் நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் பணிகளில் உள்ளன. பொதுப் பயனீட்டுத் துறையில் அவ்விகிதம் 30 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது.

ஒப்புநோக்க, பிலிப்பீன்சில் கட்டுமானத் துறையில் இந்த விகிதம் கிட்டத்தட்ட 18.6 விழுக்காடாக உள்ளது. இது மலேசியாவில் 15 விழுக்காடாகவும் இந்தோனீசியாவில் 16 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளது.

ஆசியான் உறுப்பு நாடுகள் பலவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வேளாண் துறையினர் இருக்கின்றனர். அது, நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உகந்த அம்சமாகும்.

நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் வேலைவாய்ப்புகள்

பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்கள்; சுற்றுச்சூழல், சுகாதார, பாதுகாப்பு மேலாளர்கள் ஆகிய வேலைகளே கடந்த 2025ஆம் ஆண்டு லிங்க்ட்டின் தளத்தில் காணப்பட்ட சிங்கப்பூருக்கான நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் வேலைவாய்ப்புகளாகும்.

நீடித்த நிலைத்தன்மை மேலாளர்கள், ஆலோசகர்கள், இயக்குநர்கள் ஆகிய பணிகள் வேகமாக வளர்ச்சிகண்டுவரும் நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் வேலைவாய்ப்புகளாக உள்ளன. இப்பொறுப்புகள், சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பிலான கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் தொடர்புடையவை.

ஆசியான் நாடுகளின் மொத்த வேலைவாய்ப்புகளில் கிட்டத்தட்ட 22.3 விழுக்காடு சுற்றுச்சூழலுக்கு உகந்த வாய்ப்புகளைக் கொண்ட பணிகளாக உள்ளன. ஆனால் நடைமுறையில் உருவான அத்தகைய பணிகளின் பங்கு 1 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்