புகைக்கவும் சூதாடவும் செலவிடுவோர் விகிதம் 10 ஆண்டுகளில் 40% சரிவு

சூதாட்டம், புகைப்பழக்கச் செலவுகள் அதிகரிப்பு

புகைக்கவும் சூதாடவும் செலவிடுவோர் விகிதம் 10 ஆண்டுகளில் 40% சரிவு

2 mins read
9f99aa11-4bb6-4826-a13d-b27219280d50
வருமானப் பிரிவில் கடைநிலையில் உள்ள 20 விழுக்காட்டுக் குடும்பங்கள், மொத்த மாதாந்தரச் செலவில் ஐந்து விழுக்காட்டைப் புகைப்பழக்கத்துக்குச் செலவிடுகின்றன; அதிக வருமானம் ஈட்டும் 20 விழுக்காட்டுக் குடும்பங்கள் மாதாந்தரச் செலவில் 2.3 விழுக்காட்டை செலவிடுகின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் சூதாட்டம், புகைப்பழக்கத்துக்குச் செலவிடும் குடியிருப்பாளர்களின் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 40 விழுக்காட்டுக்கும் மேலாகக் குறைந்துள்ளது.

அனைத்து வருமானப் பிரிவினர், அனைத்து வகைக் குடியிருப்புகளில் வசிப்பவர்களிடையே இப்பழக்கங்கள் குறைந்துள்ளன.

கடந்த 2013ல் ஐந்தில் ஒரு குடும்பம் சூதாட்டத்தில் ஈடுபட்டது. 2023ல் அது பத்தில் ஒரு குடும்பமாகக் குறைந்துள்ளது.

புகைக்கும் பழக்கம் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 17 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, கடுமையான புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளே இதற்கு முக்கியக் காரணங்கள் என்று சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை புதன்கிழமை (ஏப்ரல் 29) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இந்தப் பழக்கங்களைத் தொடர்பவர்களின் மாதாந்தரச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.

சூதாட்டத்திற்கான சராசரி செலவு $240லிருந்து $283 ஆகவும், புகைபிடிப்பதற்கான செலவு $224லிருந்து $255 ஆகவும் உயர்ந்துள்ளது. 2023ல், தரைவீடுகளில் வசித்தோர் ஆக அதிகமாக சராசரியாக மாதம் $328 செலவிட்டனர். ஈரறை வீடுகளில் வசித்தோர் ஆக அதிக அளவில் சராசரியாக மாதம் $286 செலவிட்டனர்.

குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இது பெருஞ்சுமையாக மாறியுள்ளது. அவர்களின் மொத்த மாதாந்தரச் செலவில் கிட்டத்தட்ட 5 விழுக்காடு புகைத்தலுக்குச் செலவிடப்படுகிறது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) குடியிருப்புகளில் வசிப்பவர்களிடையே இந்தப் பழக்கங்கள் அதிகம் காணப்படுகின்றன.

குறிப்பாக, நான்கறை வீடுகளில் வசிப்பவர்கள் சூதாட்டத்திலும், ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்பவர்கள் புகைபிடித்தலிலும் அதிகம் ஈடுபடுகின்றனர். புகையிலை மீதான வரி உயர்வால் அதன் விலை அதிகரித்துள்ளதும், இந்த அடிமைப்படுத்தும் பழக்கங்களின் தீவிரமுமே செலவு அதிகரிப்பிற்குக் காரணங்களாக ஆய்வாளர்கள் சுட்டினர்.

சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையின் 2012/2013, 2017/2018, 2023 ஆகிய ஆண்டுகளின் வீட்டுச் செலவு கணக்கெடுப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வின் ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் கிட்டத்தட்ட 11,050 முதல் 13,100 குடும்பங்கள் பங்கேற்றன.

அக்குடும்பங்கள் தங்களின் இரு வார காலச் செலவுகள் குறித்த விவரங்களை வழங்கின.

அதன் அடிப்படையில், கடந்த பத்தாண்டுகளில் சிங்கப்பூரர்களின் செலவிடும் பழக்கம் குறித்து ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

சிங்கப்பூர் பூல்சில் பந்தயம் கட்டுவது, விளையாட்டுப் போட்டிகளில் பந்தயம், குதிரைப் பந்தயம், சூதாட்டக்கூடம், மாஜோங், அட்டை விளையாட்டுகள் உள்ளிட்டவை சூதாட்டங்களாகக் கருதப்படுகின்றன. சிகரெட், சுருட்டு உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் புகைபிடித்தலாகக் கருதப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்