‘ஆர்ச்சர்ட் கேட்வே’ கட்டடத்தில் தீ:100 பேர் வெளியேற்றம்

‘ஆர்ச்சர்ட் கேட்வே’ கட்டடத்தில் தீ:100 பேர் வெளியேற்றம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Nov 2026 - 9:53 am

1 mins read

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஆர்ச்சர்ட் கேட்வே கட்டடத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 9) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்து 100 பேர் வெளியேற்றப்பட்டனர்.

எண் 277, ஆர்ச்சர்ட் ரோடு என்ற முகவரியில் உள்ள கட்டடத்தில் தீ விபத்துகுறித்து அன்றைய தினம் மாலை மணி 5.40க்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.

கட்டடத்தின் இரண்டாம் கீழ்த்தளத்தில் மின்சாரத் தளவாடங்கள் இருந்த அறையில் ஏற்பட்ட தீயைக் குடிமைத் தற்காப்புப் படையினர் அணைத்தனர்.

பாதுகாப்புக் கருதி, ஏறத்தாழ 100 பேரை அக்கட்டடத்திலிருந்து காவல்துறை வெளியேற்றியதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.

யாருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை. தீ ஏற்பட்டதன் காரணம் விசாரிக்கப்படுகிறது.

அன்றைய தினம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் சம்பவ இடத்தை மாலை 6 மணியளவில் சென்றடைந்தபோது சாமர்செட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து ஆர்ச்சர்ட் கேட்வே கட்டடத்துக்கு இட்டுச் செல்லும் கதவுகள் மூடப்பட்டிருந்தன. கட்டடத்தின் வெளியே புகை காணப்பட்டது.

தீயணைப்பு வாகனங்கள் நான்கும் காவல்துறை வாகனங்கள் ஆறும் கட்டடத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்தன. புகையினால் எழுந்த நெடியை உணரமுடிந்ததாகச் சிலர் கூறினர்.

கடந்த வாரம் (நவம்பர் 2) ஆர்ச்சர்ட் ரோட்டில் பிரபலமான நீ ஆன் சிட்டி கடைத்தொகுதியின் கினோகுனியா புத்தகக் கடையின் ஓர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. வாடிக்கையாளர்களுடன் ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பல மணிநேரம் கடை மூடப்பட்டிருந்தது. அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

குறிப்புச் சொற்கள்