பொங்கோல் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் தீ மூண்டதையடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) இரவு அச்சம்பவம் நிகழ்ந்தது. அக்கம்பக்கத்தினர் சுமார் 60 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
புளோக் 229A சுமாங் லேனில் இச்சம்பவம் நேர்ந்தது. அளவுக்கு அதிகமாக சூடேற்றப்பட்ட அடுப்பு தீச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் குழாயால் தீ அணைக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு 11.05 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அது குறிப்பிட்டது.
2023ஆம் ஆண்டு குடியிருப்புக் கட்டடங்களில் 970 தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. 2022ஆம் ஆண்டு பதிவான எண்ணிக்கையைவிட அது 3.7 விழுக்காடு அதிகம்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 2024 பிப்ரவரியில் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றன.
குடியிருப்புக் கட்டடங்களில் ஏற்படும் தீச்சம்பவங்களில் பெரும்பாலானவை கவனிக்கப்படாத சமையல் நடவடிக்கைகளால் நிகழ்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.