சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட ‘மேண்டி’ எனும் கப்பலில் மூண்ட தீயில் சிப்பந்திகள் இருவர் மாண்டனர்.
சீனாவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) துயரச் சம்பவம் நடந்தது.
கப்பலில் இருந்த மூன்றாவது சிப்பந்தி வெளியேற்றப்பட்டு, சிகிச்சைக்காகக் கரைப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கப்பலில் மியன்மாரைச் சேர்ந்த 25 சிப்பந்திகள் இருந்தனர் என்றும் சிங்கப்பூரர் எவரும் இல்லை என்றும் ஆணையம் கூறியது.
கப்பலின் இயந்திரம் இருந்த அறையில், சிங்கப்பூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் நெருப்புப் பற்றியதாகக் கூறப்பட்டது. சிப்பந்திகள் தீயை அணைத்தனர்.
சீனாவின் யான்தாய்த் துறைமுகத்திற்குக் கப்பலை இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஆணையம் குறிப்பிட்டது. காற்றின் தூய்மை கெட்டதாகத் தகவல் இல்லை.
மாண்டவர்களின் குடும்பத்தாருக்கு ஆணையம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனும் சீன அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் அது சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் குறித்த விசாரணை நடத்தப்படும் என்றும் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

