தோ பாயோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடொன்றின் சமையலறையில் திங்கட்கிழமை (அக்டோபர் 6) காலை தீப்பற்றியதைத் தொடர்ந்து மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
லோரோங் 5 தோ பாயோவில், புளோக் 63ன் ஒரு வீட்டில் காலை சுமார் 9.45 மணிக்குத் தீப்பற்றியதாகத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. குடிமைத் தற்காப்புப் படை, மூன்றாம் தளத்தில் உள்ள வீட்டில் மூண்ட நெருப்பைத் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைத்ததாகக் கூறியது. அந்த புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.
மின்சாரக் கோளாற்றால் தீப்பற்றியிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியந்தது.
சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மூவரில் இருவர் புகையைச் சுவாசித்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் சோதிக்கப்பட்டனர். மூன்றாமவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறியது.
சம்பவம் நேர்ந்தபோது வீட்டில் ஒருவரும் இல்லை என்று பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாய் யின்சாவ் சொன்னார். காலை 10.30 மணிக்குச் சென்றபோது சமூக நிலையத்தையும் நகர மன்றத்தையும் சேர்ந்த தொண்டூழியர்கள் அங்கிருந்ததாக அவர் கூறினார்.
“தீப்பற்றிய வீடு எந்த அளவுக்குச் சேதமுற்றுள்ளது என்பதையும் என்னென்ன பொருள்களை மீட்கமுடியும் என்பதையும் மதிப்பீடு செய்துவருகிறோம்,” என்றார் திரு சாய்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் காலை சுமார் 10.50க்கு அங்குச் சென்றபோது நெருப்பு அணைக்கப்பட்டுவிட்டது.
குடியிருப்பாளர்கள் சிலர் அருகிலிருந்த திறந்தவெளியிலும் புளோக்கின் கீழே உள்ள வெற்றுத்தளங்களிலும் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். பின்னர் காலை 11 மணியளவில் அவர்கள் வீடுகளுக்குத் திரும்பத்தொடங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
தீப்பற்றிய வீட்டில் வசித்த திரு அவால், உணவு விநியோகத்திற்காக வெளியே சென்றிருந்தார். காலை 10 மணிக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர் தீப்பற்றியது பற்றி தம்மிடம் தொலைபேசியில் கூறியதாகச் சொன்னார். ஓரறை வாடகை வீட்டில் 29 வயது திரு அவால், இரண்டுக்கும் எட்டுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து பிள்ளைகளுடன் வசிக்கிறார். சமையலறையின் மின்கம்பிக் கட்டமைப்பால் தீப்பற்றியிருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
தீப்பற்றியதற்கான காரணம் ஆராயப்படுகிறது.