வறியோரின் பசியாற்ற ஒன்றிணைந்த நல்லுள்ளங்கள்

3 mins read
62ace983-fae4-4274-9899-f1c30324ed08
உள்ளூர் உணவு நன்கொடை நிறுவனமான ‘ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்’ (Food from the Heart - FFTH) அமைப்பின் வருடாந்தர ‘ஹார்ட் ஆன் வீல்ஸ்’ உணவுக் கொடை திரட்டும் நிகழ்ச்சியில் ஏறத்தாழ 33,000க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. - படம்: ஃபுட் ஃப்ரம் த ஹார்ட்
multi-img1 of 3

உள்ளூர் உணவு நன்கொடை நிறுவனமான ‘ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்’ (Food from the Heart - FFTH)  அமைப்பின் வருடாந்தர ‘ஹார்ட் ஆன் வீல்ஸ்’ உணவுக் கொடை திரட்டும் நிகழ்ச்சியில் ஏறத்தாழ 33,000க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

வாரயிறுதியில் (மார்ச் 1, 2) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  சமூக அருட்கொடையின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் ‘ஃபுட் ஃப்ரம் த ஹார்ட்’ அமைப்பு ‘வெர்ன்ஸ்’ வாகனத் தொழில்துறை நிறுவனத்துடன் (Wearnes Automotive)  இணைந்து  ஏறத்தாழ 28,000 உணவுப் பொருள்களைச் சேகரிக்கும்  இலக்குடன் களமிறங்கியது.

இந்நிகழ்ச்சியில்  பொதுமக்களும் 16 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மன்றங்களும் இணைந்து, இவ்வமைப்பின் உணவு விநியோகத் திட்டங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் கடந்து ஏறக்குறைய $125,000 மதிப்பிலான உணவுப்  பொருள்களை நன்கொடையாக வழங்கினர். 

அரிசி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களுடன் ரெனால்ட், வால்வோ, லோட்டஸ், போல்ஸ்டார் மற்றும் ஜாகுவார் கார்கள், ஹார்லி-டேவிட்சன், டுகாட்டி மோட்டார்சைக்கிள்களில் வலம் வந்த பல்வேறு குழுவினர், அந்த உணவுப் பொருள்களை ‘ஃபுட் ஃப்ரம் த ஹார்ட்’ நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.

சுமார் 260க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிதிரண்டு வந்த அவர்கள், ஏறத்தாழ 33,000 உணவுப் பொருள்களை நன்கொடையாக அளித்தனர்.  

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின்  மூத்த நாடாளுமன்றச் செயலாளர்  எரிக் சுவா சமூக நன்கொடையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு எரிக் சுவாவுடன் அவ்வட்டார அடித்தள அமைப்புகளின் தொண்டூழியர்களும் திரளாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சமூகக் கொடையுணர்வை நற்செயலாக மாற்றும் இலக்குடன் அவர்கள் 1,000 கிலோ உணவை (13,700 உணவுப் பொருள்கள்) நன்கொடையாக வழங்கினர்.

தேவையுள்ளோர்  சமூகத்தில் உள்ளனர் என்றும் அதுகுறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தவும் அந்த முக்கிய நோக்கத்திற்கு உதவிடும்  வகையில் அனைவரையும் ஈடுபடுத்தவும் இந்த நிகழ்ச்சி துணைநிற்கிறது என்று திரு சுவா, தமிழ் முரசிடம் கூறினார்.

தொண்டூழியத்தின் வலிமையை எடுத்துரைக்கும் இந்நிகழ்ச்சிகளில் நாளைய தலைவர்களான  இளையர்கள் பங்குபெறுவதைக் காண்பது சிறப்பு என்றார் அவர். 

வெர்ன்ஸ் நிறுவனத்துடனான இந்தப் பங்காளித்துவம் 2023ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது என்றும் இதன்வழியாக 2023, 2024ஆம் ஆண்டுகளில் 54,500க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்களையும் $129,000 நன்கொடைகளையும் அமைப்பு திரட்டியுள்ளது என்றும் அதன் செய்தியறிக்கை கூறியது.

இம்முயற்சி பற்றிக் குறிப்பிட்ட ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ராபின் சி. லீ, இச்செயலின் வாயிலாகத் தங்களுடன் இணைந்து சமூகத்தின் தேவைகளைச் சந்திக்கவும் தேவையுள்ளோரின் வாழ்வை மேம்படுத்தவும் கூட்டாகச் செயல்பட்ட பங்காளிகளுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

“முக்கியமாக, சமூகக் கட்டமைப்பு மற்றும் நீடித்த நன்கொடை கலாசாரத்தை வளர்ப்பதில் இத்தகைய செயல்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன,” எனவும் திரு லீ குறிப்பிட்டார்.

தற்போது 13,500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்த அமைப்பு. கூட்டாண்மை நிறுவனங்கள், சமூக  ஆதரவால் பெறப்பட்ட இந்த நன்கொடை பொருள்கள் மற்றும் நிதியாதரவு மூலம் 3,500க்கும் மேற்பட்ட குறைந்த வருமானக் குடும்பங்களைச் சென்றடைய  இயலும் என்றும் அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்